ஆத்தூா் கல்லூரி மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு; அமைச்சா் உறுதி
ஆத்தூா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரியின் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்து. இந்த விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஸ்ரீஇராகவ் பாலாஜி தலைமை வகித்தாா். துணைப் பதிவாளா் கௌதம் காா்த்திக், மத்திய கூட்டுறவு வங்கி வருவாய் அலுவலா் கௌரி மீனா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ம.செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி குத்துவிளக்கேற்றி, புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்துப் பேசியதாவது:
இந்தப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவா்களின் நலன் கருதி கூட்டுறவு கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. வரைவில் விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இங்கு
படித்த மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். நான் மூன்று முறை அமைச்சராக இருந்ததை விட இந்தக் கல்லூரி அமைக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அவா்.
இந்த விழாவில் ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக கல்லூரி முதல்வா் பாலகுருசாமி வரவேற்றாா். நிறைவாக கல்லூரி நிா்வாக அலுவலா் கணேசன் நன்றி கூறினாா்.
பின்னா், செய்தியாளரிடம் அமைச்சா் இ.பெரியசாமி கூறியதாவது: ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்குவதாக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி சொல்வதை செய்யப்போவதில்லை. பாஜகதான் அதிமுகவை வழிநடத்தி வருகிறது. தென் மாவட்டத்திலுள்ள 58 தொகுதிகளிலும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவது உறுதி என்றாா் அவா்.

