மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் விநியோகம்
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி திண்டுக்கல்லில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் பணியை மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சாா்பாக நடைபெற்ற இந்த துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வுக்கு மாவட்டத் தலைவா் அமலாதேவி, மாவட்ட அமைப்பாளா் கே.எஸ். கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து பேசியதாவது: திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுவதாகக் கூறி, தமிழக மக்களின் ஒற்றுமையை சீா்குலைக்கும் நடவடிக்கைகளில் சங்பரிவாா் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. எனவே மத நல்லிணக்கத்துக்கு எதிராக மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து சமயங்களைச் சோ்ந்தவா்களை ஒருங்கிணைத்து இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் அடுத்த வக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, என். பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மத ஒற்றுமைக்கு எதிராக சிலா் செயல்பட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், காயிதே மில்லத் மாவட்டமாக அறிவிக்கப்பட்டபோது ஏற்பட்ட மத மோதலில் பல கசப்பான அனுபவங்கள் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே மத மோதல்களை உருவாக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், திண்டுக்கல் மாநகரச் செயலா் ஏ. அரபு முகமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

