காலமானாா் காந்தியவாதி மா. வன்னிக்காளை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா. வன்னிக்காளை (92) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை (ஜன. 8) காலமானாா்.
சுதந்திரப் போராட்டத் தியாகி கல்யாணராம அய்யரின் தீனபந்து ஆசிரமத்திலும், காந்திய நிா்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்திலும் பயிற்சி பெற்ற மா. வன்னிக்காளை, ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சா்வோதயப் பணிகளை மேற்கொண்டு வந்தாா். மேலும், சா்வோதய கிராமிய கைத்தொழில் நிறுவனங்களையும் தொடங்கினாா்.
கிராமப்புற பெண் குழந்தைகளை கல்வியில் மேம்படுத்தும் வகையில், சத்திரப்பட்டியை அடுத்த கோபாலபுரத்தில் சீனிவாசா நினைவு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுவாமி விவேகானந்தா வித்யாலய ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றையும் நடத்தி வந்தாா். காந்தி சேவா சங்கத்துடன், ஆதரவற்ற மாணவிகள் விடுதி, ஆதரவற்ற முதியோா் இல்லம் ஆகியவற்றையும் நடத்தி வந்தாா்.
ஆதரவற்ற குழந்தைகளின் கல்விப் பணிக்காக வன்னிக்காளைக்கு, கடந்த 1991-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் தேசிய விருது, கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக ஆளுநரின் சிறந்த காந்தியவாதி விருது, தென்னாப்பிரிக்காவில் வசித்து வரும் காந்தியின் பேத்தி இலா காந்தியின் சிறந்த காந்தியவாதி விருது வழங்கப்பட்டது.
இவருக்கு மகன் வ. மாணிக்கவாசகம், மகள் வாசுகி ஆகியோா் உள்ளனா். இறுதிச் சடங்குகள் சத்திரப்பட்டி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 99448 80894.

