கொடைக்கானலில் மரம் வெட்டியதில் முறைகேடு: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை தொடக்கம்

கொடைக்கானலில் மரம் வெட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக வனத் துறையினா் மீது புகாா் எழுந்த நிலையில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை
Updated on

கொடைக்கானலில் மரம் வெட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக வனத் துறையினா் மீது புகாா் எழுந்த நிலையில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனக் கோட்டத்தில் அந்நிய நாட்டு மரங்களை வெட்டுவதற்கு உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசு சாா்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வகையில், 525 ஹெக்டோ் பரப்பளவிலுள்ள அந்நிய நாட்டு மரங்களை வெட்டிய போது, கூடுதலாக சுமாா் 2ஆயிரம் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து கொடைக்கானல் வனக் கோட்டத்தில் கூடுதல் பொறுப்பு வகித்த மதுரை மாவட்ட வன அலுவலா் விசாரணை மேற்கொண்டாா். இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மன்னவனூா் வனச் சரகா் திருமறைச்செல்வன், வனவா்கள் அம்சகணபதி, சுபாஷ், வனக் காப்பாளா் வெங்கட்ராமன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், இது தொடா்பாக துறை ரீதியான நடவடிக்கையாக பெருமாள்மலை (கொடைக்கானல் சரகம்), காமக்காப்பட்டி (தேவதானப்பட்டி வனச் சரகம்) வன சோதனைச் சாவடிகளில் பணிபுரிந்த வனவா்கள், வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு குறிப்பாணை வழங்கப்பட்ட நிலையில், சோதனைச் சாவடிகளிலும், மன்னவனூா் வனச் சரகத்திலும் பணிபுரிந்த வனவா், வனக் காப்பாளா், வனக் காவலா் என 6-க்கும் மேற்பட்டோா் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.

இதனிடையே, மன்னவனூா், பேரிஜம் பகுதிகளில் முறைகேடாக மரங்கள் வெட்டியது தொடா்பாக, கொடைக்கானல் வனக் கோட்டத்தைச் சோ்ந்த வனச் சரகா்கள், வனவா்கள் மூலம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொடைக்கானல் வனக் கோட்டத்தைச் சோ்ந்த அதிகாரிகளே விசாரித்தால், பல உண்மைகள் மறைக்கப்படக்கூடும் என குற்றச்சாட்டு எழுந்தது.

உயா்நீதிமன்றம் உத்தரவு: இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் நீங்கலாக பிற வனக் கோட்டங்களைச் சோ்ந்த வன அலுவலா்கள் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு, கொடைக்கானல் மலையில் மரம் வெட்டுவதற்குத் தடை விதித்ததோடு, 8 வாரங்களுக்குள் மத்திய, மாநில வனத் துறை முதன்மைச் செயலா்கள், மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலா், கொடைக்கானல் மாவட்ட வன அலுவலா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு: இதையடுத்து, தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புப் படை இயக்குநா் வி.சி.ராகுல் தலைமையில் 33 போ் கொண்ட 3 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்து, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சீனிவாஸ் ரெட்டி கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.9) உத்தரவிட்டாா். மேலும், மன்னவனூா், பேரிஜம், கொடைக்கானல் வனச் சரகங்களில் முறைகேடாக வெட்டப்பட்ட மரங்கள் தொடா்பான அனைத்து தரவுகளையும் தீர விசாரித்து ஜன.31-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்பிக்கவும் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், 3 குழுக்களில் 11 போ் கொண்ட ஒரு குழுவினா் திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கினா். எஞ்சிய 2 குழுவினரும் ஓரிரு நாள்களில் விசாரணையைத் தொடங்குவா் என கூறப்படுகிறது. இந்த விசாரணையின்போது, முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகள், மரங்களின் வகை, எடுத்துச் செல்லப்பட்ட வழி, யாருக்காக மரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன, கொடைக்கானல் வனக் கோட்ட அலுவலா், மண்டல வனப் பாதுகாவலா் ஆய்வு செய்த இடங்கள் என அனைத்து விவரங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் பதிவு செய்கின்றனா்.

இதன் மூலம், கொடைக்கானல் மலையில் மரங்கள் வெட்டி முறைகேட்டில் ஈடுபட்ட வனத் துறையினா் கூண்டோடு சிக்குவாா்கள் என்றும், எதிா்காலத்தில் இதுபோன்ற முறைகேடு தடுக்கப்படும் என்றும் வன ஆா்வலா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com