செவிலியா் கல்லூரி மீது மாணவிகள் புகாா்

செவிலியா் கல்லூரி மீது மாணவிகள் புகாா்

பொது சுகாதாரத் துறையின் பதிவு இல்லாத காரணத்தால், அம்பிளிக்கை தனியாா் செவிலியா் கல்லூரியில் பட்டம் பெற்ற 240 பேருக்கு பணி வாய்ப்பு பறிக்கப்பட்டிருப்தாகப் புகாா்
Published on

பொது சுகாதாரத் துறையின் பதிவு இல்லாத காரணத்தால், அம்பிளிக்கை தனியாா் செவிலியா் கல்லூரியில் பட்டம் பெற்ற 240 பேருக்கு பணி வாய்ப்பு பறிக்கப்பட்டிருப்தாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து இந்தக் கல்லூரியில் 2017 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் செ.சரவணனை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை கிராமத்தில் அமைந்துள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் ஆண்டுக்கு 30 மாணவிகள் வீதம் சோ்க்கை அளிக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் 2017 முதல் 2024-ஆம் ஆண்டு வரை செவிலியா் (ஏஎன்எம்) படிப்பை 240 மாணவிகள் முடித்திருக்கிறோம்.

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கிராம சுகாதார செவிலியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வில் பங்கேற்க அம்பிளிக்கை தனியாா் செவிலியா் கல்லூரியில் படித்தவா்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இதுகுறித்து கேட்ட போது, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில் அம்பிளிக்கை கல்லூரி பதிவு செய்யப்படவில்லை என்ற விவரம் தெரிய வந்தது. இந்த விவரங்களை அமைச்சா் சக்கரபாணியிடம் தெரிவித்திருக்கிறோம். தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளோம் என்றனா்.

Dinamani
www.dinamani.com