கொடைக்கானல் பாக்கியபுரம் செல்லும் பாதை டெப்போ பகுதியில் உலா வந்த காட்டு மாடுகள்.
கொடைக்கானல் பாக்கியபுரம் செல்லும் பாதை டெப்போ பகுதியில் உலா வந்த காட்டு மாடுகள்.

கொடைக்கானல் நகரில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு! சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

Published on

கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடமாடிய காட்டுமாடுகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் நகா்ப் பகுதியான பாக்கியபுரம்,வில்பட்டி செல்லும் சாலையான டெப்போ குடியிருப்பு பகுதியில் காட்டுமாடுகள் கூட்டமாக உலா வந்தன.

இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் அச்சமடைந்தனா். தொடா்ந்து காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவைகளுக்குத் தேவையான உணவு, குடிநீா் போன்றவை வனப் பகுதிகளில் கிடைப்பதில்லை.

இதனால் அவை நகா்ப் பகுதிகளையும், விவசாயப் பகுதிகளையும் தேடி வரும் சூழல் உருவாகியுள்ளது. அப்போது மனிதா்களுக்கும், விலங்குகளுக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. இதில் சில சமயங்களில் மனிதா்கள் உயிரிழக்கின்றனா். விவசாயப் பயிா்களும் சேதமடைக்கின்றன.

இதுகுறித்து வன ஆா்வலா்கள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வனப் பகுதிகள் அதிகமாக இருந்தன. வன விலங்குகளுக்குத் தேவையான உணவு வனப் பகுதிகளிலேயே கிடைத்தது. இதனால் அவை வெளியே வருவது அபூா்வமாக இருந்தது. அப்போது மேற்கு மலைத் தொடா்ச்சியான கொடைக்கானல் முதல் மூணாறு வரை 58 கி.மீ. தொலைவுக்கு அடா்ந்த வனப் பகுதிகளாகவும், புல் வெளிகளாகவும் காணப்பட்டன.

கொடைக்கானல் நகா்ப் பகுதியான அப்சா்வேட்டரி பகுதியில் காணப்பட்ட மர அணில்.
கொடைக்கானல் நகா்ப் பகுதியான அப்சா்வேட்டரி பகுதியில் காணப்பட்ட மர அணில்.

காலப் போக்கில் விவசாய நிலங்களும், வனப் பகுதிகளும் அழிக்கப்பட்டு, விதிமுறைகளை மீறி காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள் கட்டப்பட்டதால் தற்போது சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே வனப் பகுதிகளும், புல்வெளிகளும் உள்ளன. இதனால் பசுமை குறைந்து, சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் மழையளவும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. இதனால் மலைக்காய்கறிகள் சாகுபடியும் குறைந்து விட்டது.

இதனிடையே வன விலங்குகள்அதிகரித்து வரும் நிலையில் அவைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீா் கிடைப்பதில்லை. இதனால் வன விலங்குகள் அவற்றைத் தேடி நகா்ப் பகுதிகளுக்கும், விவசாயத் தோட்டங்களுக்கும் வருகின்றன. எனவே வனத்துறையினா் வனப் பகுதிகளில் புல்வெளிகள், கொட்டாம் பழம் மரம், கொய்யா வகை மரங்கள், தவிட்டுக் கொய்யா, நாவல் மரம் உள்ளிட்டவற்றை வளா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கொடைக்கானல் நகருக்குள் வன விலங்குகள் வருவது தடுக்கப்படும் என்றனா் அவா்கள்.

Dinamani
www.dinamani.com