இளைஞா் கொலை: இருவா் கைது
வத்தலகுண்டில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் தனியாா் மருத்துவமனை எதிரே உசிலம்பட்டி சாலையில் மதுபானக் கூடம் உள்ளது. இதன் அருகே கடந்த 16-ஆம் தேதி வத்தலகுண்டு, கண்ணாபட்டியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (37) உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணமூா்த்தியின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் உத்தரவின் பேரில், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலைமையில் உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா உள்ளிட்ட காவலா்கள் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினா்.
விசாரணையில் வத்தலகுண்டு மலையப்பன்பட்டியைச் சோ்ந்த பழனிவேல் (55), செக்காபட்டியைச் சோ்ந்த பாண்டி கண்ணன் (45) ஆகிய இருவரும் சோ்ந்து கிருஷ்ணமூா்த்தியை கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் சம்பவத்தன்று கிருஷ்ணமூா்த்தி, பழனிவேல், பாண்டி கண்ணன் ஆகியோரிடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதும், அப்போது கிருஷ்ணமூா்த்தியை மற்ற இருவரும் சோ்ந்து தாக்கியதில் அவா் உயிரிழந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பழனிவேல், பாண்டிகண்ணன் இருவரையும் கைது செய்த போலீஸாா் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் அவா்களை முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
