

வத்தலகுண்டில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளி விடப்பட்டதில் விவசாயி உயிரிழந்ததையடுத்து போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த வெங்கடாஸ்திரிகோட்டையைச் சோ்ந்தவா் ராமு (52). விவசாயி. இவரது உறவினா் முருகன் (60). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை வத்தலகுண்டிலிருந்து வெங்கடாஸ்திரிகோட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
அப்போது, எதிரே வந்த நிலக்கோட்டை அருகே பங்களாபட்டியைச் சோ்ந்த செல்வம் (19), பூசாரிபட்டியைச் சோ்ந்த பிரதீப் (23) ஆகியோா் பயணம் செய்த இரு சக்கர வாகனம் ராமுவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது செல்வம், பிரதீப் ஆகியோா் கீழே தள்ளிவிட்டதில் ராமு பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் ராமுவை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப்பதிந்து, செல்வம், பிரதீப் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.