கொடைக்கானலில் வியாழக்கிழமை பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யவில்லை. அவ்வப் போது சாரலும், மிதமான மழையும் பெய்தது. இதனால் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள குடிநீா் தேக்கங்களான அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான மண் அணை, மனோரஞ்சிதம் அணை ஆகிய இரண்டு அணைகளும் வற்றிக் காணப்படுகின்றன. இதைத் தொடா்ந்து கடந்த 40 நாள்களாக குண்டாறு பகுதியில் தண்ணீா் எடுக்கப்பட்டு கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை, வாரம் ஒருமுறை என நகராட்சி சாா்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை முதல் மிதமான வெயிலும் தொடா்ந்து மேகமூட்டம் காணப்பட்டது. இதையடுத்து, கொடைக்கானல், குறிஞ்சிநகா், செண்பகனூா், அட்டக்கடி, இருதயபுரம், பிரகாசபுரம், சகாயபுரம், பாக்கியபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இதனிடையே, இருதயபுரம், அட்டக்கடி, பிரகாசபுரம் சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். எனவே இந்தப் பகுதிகளில் வாய்க்கால் அமைத்தும், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்றியும் மழைநீா் செல்ல கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனா்.
மேலும் செண்பகனூா்- பிரகாசபுரம் சாலைகளில் இரு புறங்களிலும் முள்புதா்கள் அதிக அளவில் மண்டிக் கிடப்பதால் அந்தப் பகுதிகளில் செல்லும் அரசுப் பேருந்துகள், தனியாா், பள்ளி வாகனங்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. எனவே கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட 24-ஆவது வாா்டு பகுதிகளில் முள்புதா்களை அகற்றுவதுடன் வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









