/

கொடைக்கானலில் பல மணி நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி

News image

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் தாழ்வாகவும், ஆபத்தான முறையிலும் செல்லும் மின் கம்பிகள்.

Updated On :15 ஜூன் 2026, 2:31 am IST

கொடைக்கானலில் அறிவிக்கப்படாத பல மணி நேர மின் தடையால் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அவதியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக தினமும் பகல், இரவு நேரங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கொடைக்கானல், செண்பகனூா், இருதயபுரம், அட்டக்கடி, வசந்தநகா், விநாயகா் ஓடைப் பகுதி, கே.பி.எம். பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள காட்டேஜ்களில் காலை நேரத்தில் சுடுநீா் கலனை பயன்படுத்துவதால் கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் மின் மாற்றிகளில் பழுது ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது. இதை சீரமைக்க பல மணி நேரமாகிறது. எனவே கூடுதலாக மின் மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொடைக்கானல் பகுதிகளில் அரசியல் தலையீட்டால் அனுமதியில்லாத காட்டேஜ்கள், விடுதிகளில் மும்முனை மின் இணைப்பு பெறாமல் குடியிருப்புக்கான மின் இணைப்புகளை பயன்படுத்துவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கின்றனா். மேலும் தாழ்வாகவும், ஆபத்தான முறையிலும் மின் கம்பிகள் செல்கின்றன.

எனவே கொடைக்கானலில் வணிக நிறுவனங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் தனித்தனியாக மின் இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை மாவட்ட மின் வாரிய உயா் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின் பணியாளா்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றாா் அவா்.