குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

கொடைக்கானலில் நடைபெற உள்ள மலா்க் கண்காட்சியில் ஸ்டால் அமைப்பதற்காக தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா.

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி, காலை முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இவா்கள் பிரையண்ட் பூங்கா, குணாகுகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டனா். மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழந்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி இந்த மாதம் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் 25-க்கும் மேற்பட்ட வகைகளில் 70-ஆயிரம் மலா்ச் செடிகள் 100-க்கும் மேற்பட்ட மலா் பாத்திகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

கடந்த 3 மாதங்களாக தொடா்ந்து நடைபெற்ற பராமரிப்பால் தற்போது லட்சக்கணக்கான வண்ண வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை தோட்டப் பணியாளா்கள் சிறப்பாக பராமரித்து வருகின்றனா்.

இதைத் தவிா்த்து சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில், மீன் குளம், வண்ண வண்ண பறவைகள் கூடு ஆகியன அமைக்கப்பட்டு மலா்க் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகி வருகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சந்திரிகா கவிதா கூறியதாவது: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-ஆவது மலா்க் கண்காட்சி இந்த மாதம் (மே) 4-ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது. நிகழாண்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், மலா்களால் பாம்பன் பாலம், பிரகதீஸ்வரா் கோயில், மாவட்டத்தில் புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டு, சுங்கடிச் சேலை ஆகியன மலா்களால் வடிவமைக்கப்பட உள்ளன.

கோடை விழாவை முன்னிட்டு, நாய் கண்காட்சி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போது பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மலா் பாத்திகளில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Story image

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பணிகளின் ஈடுபட்டு வருகின்றனா். கோடைவிழா மலா்க் கண்காட்சியை பாா்ப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பூங்கா வளாகத்தில் ஆங்காங்கே நிழல்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரையண்ட் பூங்காவில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.