மதுரை அரசு மருத்துவமனையில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியரைக் கண்டித்து அப்பிரிவு மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையானது மருத்துவக் கல்லூரியைச் சார்ந்ததாகும். இங்கு பிரேதப் பரிசோதனைக்காக, சட்டம் சார்ந்த மருத்துவத்துறை உள்ளது. இதில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், 2 உதவிப் பேராசிரியர்கள், 2 விரிவுரையாளர்கள் உள்ளனர். இதில் பேராசிரியராக டாக்டர் நடராஜன் உள்ளார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை மறைத்துவைப்பதாகவும், சக மருத்துவர்களை மிரட்டுவதாகவும் துறைப் பேராசிரியர் மீது புகார் கூறப்படுகிறது. மேலும், அவரை இடமாற்றம் செய்யக் கோரி அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் அத்துறை மருத்துவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தால் 15 சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சடலத்துக்குரியவர்கள் பனகல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதிகயிலைராஜன் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை டாக்டர்களைச் சமரசம் செய்தார். இதையடுத்து மருத்துவர்கள் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர் பிரேதப் பரிசோதனை வழக்கம்போல நடைபெற்றது.
பொதுமக்கள் கோரிக்கை: சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் எனில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள துறை அலுவலகத்துக்கு சம்பந்தப்பட்ட போலீஸார், சடலத்துக்குரிய உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், மருத்துவமனை டீனாக டாக்டர் ரேவதிகயிலைராஜன் பொறுப்பேற்றதும், சட்டம் சார்ந்த பிரிவின் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை அறைக்கு நேரில் வரவேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு காவல்துறை, பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளது. ஆனால், இதற்கு சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் ஒத்துழைக்க மறுப்பதாக சக மருத்துவர்கள் புகார் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

