அலங்காநல்லூர் அருகே பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு வாசன் நகரைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (70). இவரது மகள் திருமணமாகி திருநெல்வேலியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை பார்ப்பகதற்காக குழந்தைவேலு குடும்பத்தினருடன் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திருநெல்வேலி சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து புதன்கிழமை காலை பொதும்பு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குழந்தைவேலு உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக குழந்தைவேலு அளித்தப்புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் அறை மற்றும் பீரோவில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் பழைய குற்றவாளிகளின் கைரேகை பதிவுகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸார் வழக்குப்பதிவு திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.