மதுரை மத்திய சிறையில் காவலர்கள் மேற்கொண்ட சோதனையில் சிறை அறையில் கைதி பதுக்கி வைத்திருந்த 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மத்தியச்சிறையில் செல்லிடப்பேசி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் இருந்து வருவதாக எழுந்த புகாரின்பேரில் சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறை அதிகாரிகள் மற்றும் மாநகர் சட்டம் ஒழுங்கு போலீஸார் சிறையில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறை வளாகத்தில் சிறைக்காவலர்கள் சரவணன், மணிகண்டன், நாகராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனர்.
இதில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதைப்பொருள் கடத்தில் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் சூசை நேவிஸ் பனாலா(41) 120 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிறை அதிகாரி ஜெயராமன் அளித்தப் புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.