நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொன் விழாவுக்கு தயாராகும் மதுரை மாவட்ட நீதிமன்றம்: அடிப்படை வசதியும் இல்லை; பராமரிப்பும் இல்லை!

குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில்  மதுரை மாவட்ட நீதிமன்றம் விரைவில் பொன்விழா காண  உள்ளது.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2019, 4:19 am

மு.கார்த்திக்

குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில்  மதுரை மாவட்ட நீதிமன்றம் விரைவில் பொன்விழா காண  உள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்றம் 1970-இல் தொடங்கப்பட்டது. இந்த நீதிமன்ற வளாகத்தினுள் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம் உள்ளிட்ட 42 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. 
 மேலும் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தினுள் சட்ட உதவி மையம், சமரசத் தீர்வு மையம், மாநில நுகர்வோர் நீதிமன்றம், தபால் அலுவலகம், வங்கி, எழுத்தர்கள் சங்க கட்டடம், வழக்குரைஞர்கள்  அலுவலகக் கட்டடம் உள்ளன. தினந்தோறும் 6 ஆயிரம் வழக்குரைஞர்கள் உள்பட 10 ஆயிரம் பேர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனர். 
இந்நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் உள்பட அனைத்து கட்டடங்களும் பராமரிப்பின்றி பாழடைந்தும், சிதைந்தும் வருகின்றன. மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவு வாயில் பகுதி, வழக்குரைஞர்கள் அலுவலகம் செல்லும் பாதை, மேற்கு நுழைவுவாயில் பாதை, கிழக்கு நுழைவுவாயில் பாதை பள்ளம் மேடாக உள்ளது. 
 இதனால் மழைக்காலங்களில் அவற்றில் தண்ணீர் தேங்குவதால் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். முறையான வாகன நிறுத்த வசதியின்றி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு நெரிசலை ஏற்படுத்துகின்றன. 
நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறை வசதியின்றி நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்படும் கைதிகள் நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள திறந்தவெளியைப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இது போன்ற சந்தர்ப்பங்களில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும் பெண்களுக்கென தனியாகக் கழிப்பறை வசதி இல்லை. இங்கு விசாரணைக்கு வரும் பெண்கள் மற்றும் பெண் கைதிகள்  ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தில் உள்ள நீதிமன்ற பெண் அலுவலர்களுக்கான கழிப்பறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். 
நீதிமன்றத்தின் பின்புறத்தில் கழிப்பறைகள் கட்டிமுடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் பூட்டிக்கிடக்கின்றன. இதேபோல காவலர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள ஓய்வறையும் திறக்கப்படாமல் உள்ளது.
 வளாகத்தினுள் முறையான சிற்றுண்டி வசதி  இல்லை. குப்பைத் தொட்டி இன்றி குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. சேதமடைந்த நாற்காலிகள், மேஜைகள், சேதமடைந்த சட்டப் புத்தகங்கள், வழக்கிற்கான ஆவணங்கள் அனைத்தும் போதிய இட வசதியின்றி குப்பைகள் போல நீதிமன்ற வளாகத்தினுள் குவிந்து கிடக்கின்றன. 
மதுரை மாவட்ட நீதிமன்றம் தொடங்கப்பட்டு, 50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வளாகத்தை முழுமையாக சீரமைத்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. 
இதுகுறித்து நீதிமன்ற நிர்வாகம் தரப்பில் கூறியது: நீதிமன்றத்திற்கு 3 துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மதுரை மாநகராட்சியிடம் கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் வேண்டும் எனக் கேட்டுள்ளோம். துப்புரவுப் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்துவிட்டால் வளாகம் மற்றும் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படும். வழக்குரைஞர் அலுவலகக் கட்டடத்தில் ஒரு மின்சார உபயோகிப்பாளர் கணக்கீட்டு பெட்டி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. மின்சார கணக்கீட்டு பெட்டியை ஒவ்வொரு வழக்குரைஞர் அலுவலக அறைக்கும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.


மின்கட்டணப் பாக்கி  ரூ.12.55 லட்சம்
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அலுவலகக் கட்டடத்தில் 98 அறைகள் உள்ளன.  அனைத்து அறைகளுக்கும் ஒரே மின்சார உபயோகிப்பாளர் கணக்கீட்டு பெட்டி இருப்பதால், அனைத்து அறைகளில் பயன்படுத்தும் ஒதுக்கீட்டுத்தாரர்களும் மின்கட்டணத்தைப் பகிர்ந்து செலுத்த வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தாமல் தற்போது ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 820 பாக்கி உள்ளது. இதற்காக கே.புதூர் உதவி மின் பொறியாளர் தரப்பில் இருந்து கட்டணத்தைச் செலுத்துமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மின்கட்டணப் பாக்கியை  3 தவணைகளாக செலுத்தி முடிக்குமாறு வழக்குரைஞர்கள் அலுவலக ஒதுக்கீட்டுதாரர்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற நிர்வாக நீதிபதி ஏ.நஸிமா பானு குறிப்பாணை வழங்கியுள்ளார். 


பகலிலும் இருள்!
இதுகுறித்து மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் கூறியது: 
இரண்டு தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தில் மின்தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்றது.  தற்போது வரை மின்தூக்கி பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மாற்றுத்தினாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். 
நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களின் ஆவணங்களை வைக்க பூட்டும் வசதி கொண்ட அலமாரிகள் கூடுதலாக அமைக்க வேண்டும். மேலும் தற்போது வழக்குரைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக ஒரு வழக்குரைஞர்கள் அலுவலகக் கட்டடம் அமைக்க வேண்டும். வங்கியின் மேல் தளத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
 ஒவ்வொரு நீதிமன்ற அறையின் வெளியே, வழக்கின் விவரம் குறித்து அறிவதற்கு திரைப்பெட்டிகள் அமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் தற்போது வரை செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. 
நீதிமன்றத்தில் மின்விசிறிகள், மின்விளக்குகள் இன்றி, பகலிலும் இருளில் பணியாற்றுவது போன்ற சூழல் உள்ளது. ஒவ்வொரு நீதிமன்ற அறையும் சுருக்கப்பட்டுள்ளதால், இடநெருக்கடியில் வழக்காடுவோர் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. நீதிமன்றத்தில் எந்தெந்த கட்டடம் எங்குள்ளது என்பதை அறிய முடியாமல் நீதிமன்றத்திற்கு வருவோர் அவதிப்படுகின்றனர். எனவே நுழைவு வாயில் பகுதியில் வரைபடம் அமைக்க வேண்டும்.
 மேலும் வழக்குரைஞர்கள் தரப்பில் நிகழ்ச்சிகள் நடத்த தனியாக அரங்கம் அமைக்க வேண்டும். நீதிமன்றத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை, கணினி உள்ளிட்ட இயந்திரப் பற்றாக்குறை உள்ளிட்டக் காரணங்களால் சான்றிட்ட நகல் (ஆர்டர் காப்பி) பெறுவதற்கு கால தாமதம் ஆகிறது. இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.