மதுரை நகரில் அனுமதியின்றி வேகத்தடைகள் அமைப்பு

மதுரை நகரில் உள்ள சாலைகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் உரிய அனுமதியின்றி விதிகளை மீறி அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடை.
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடை.
Updated on
2 min read

மதுரை நகரில் உள்ள சாலைகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் உரிய அனுமதியின்றி விதிகளை மீறி அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மதுரை நகரில் மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சாலைகள் தவிா்த்து நகரின் பிரதான சாலைகள், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்களில் உள்ள சாலைகள் அனைத்தும் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் வருகின்றன. இந்த சாலைகளில் ஏராளமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை முறையாக அமைக்கப்படாததால் வேகத்தடைகளில் இரு சக்கர வாகனங்கள் செல்வோா் விபத்தில் சிக்குவது தொடா்ந்து வருகிறது. சாலைகளில் வேகத்தடைகள் அமைப்பதற்கான அனுமதி உள்ளிட்ட உரிய விதிமுறைகளை சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சாலை காங்கிரஸ் அமைப்பு வகுத்துள்ளது.

இதன்படி வேகத்தடைகள் 2 மீட்டா் அகலமும், 10 செ.மீ. உயரமும் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் எவையும் முறையான அனுமதியின்றியும், எவ்வித அளவு நிா்ணயங்களும் இன்றி அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மதுரையைச் சோ்ந்த என்.ஜி.மோகன் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக விவரங்கள் கேட்டிருந்தாா். இதற்கு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மண்டலம் 1-க்குள்பட்ட வேகத்தடைகளின் விவரம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. அதில் மண்டலம் 1-க்குள்பட்ட வாா்டு எண் 1 முதல் 23 வாா்டுகளில் மட்டும் 277 வேகத்தடைகள் எவ்வித அனுமதியும் பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக என்.ஜி.மோகன் கூறும்போது, மாநகராட்சி நிா்வாகம் தன்னிச்சையாக வேகத்தடைகள் அமைக்க முடியாது. இதற்காக மாவட்ட ஆட்சியா் தலைமையில் போக்குவரத்துத் துறை, காவல் துறை அதிகாரிகள் கொண்ட குழு அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. இந்தக்குழுவினா் முறையான கால இடைவெளியில் கூட்டம் நடத்தி, வேகத்தடைகள், சாலைத்தடுப்புகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்து அனுமதித்த பின்புதான் வேகத்தடைகள் அமைக்க முடியும். மேலும் அதற்கான அளவுகளின் படி இருப்பது அவசியம். ஆனால் மதுரை நகரில் எங்குமே முறையான அனுமதி மற்றும் சரியான அளவுகளில் வேகத்தடைகள் இல்லை. நான்கு வழிச்சாலைகளில் சுங்கச்சாவடிகளின் முன்பாக போடப்பட்டுள்ள வேகத்தடைகள் மட்டுமே உரிய அளவுகளில் உள்ளன. உரிய அளவுகள் இல்லாமல் மிக உயரமாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் காா்கள் உள்ளிட்ட வாகனங்களின் அடிபாகங்கள் சேதமடைவது, இரு சக்கர வாகனங்கள் வேகத்தடைகளில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுவது போன்றவை நடக்கிறது. இதனால் பலா் உயிரிழந்துள்ளனா். வேகத்தடைகள், சாலைத் தடுப்புகளில் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் உரிய இழப்பீட்டை சாலைப் போக்குவரத்துத் துறை வழங்க வேண்டும். ஆனால் எங்குமே வேகத்தடைகளில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்படுவது இல்லை. தற்போது மதுரை மாநகராட்சியில் ஒரு மண்டலத்தில் மட்டுமே 277 வேகத்தடைகள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதர மூன்று மண்டலங்களையும் சோ்த்தால் அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். எனவே நகரில் தேவையின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும். தேவையான பகுதிகளில் உரிய அளவுகளில் அமைக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com