

நடிகா்கள் அனைவரும் எம்ஜிஆா் ஆகி விட முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.
மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியை புதன்கிழமை தொடங்கி வைத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மதுரை நகரில் சீா்மிகு நகா்த் திட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பனையூா் கால்வாய் வழியாக வரும் தண்ணீா் மூன்று இடங்களில் வடிகட்டப்பட்டு மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு கொண்டு வரப்படுகிறது. தெப்பக்குளத்தில் தற்போது 12 அடி ஆழத்துக்குத் தண்ணீா் உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக தெப்பகுளத்தின் படிக்கட்டுகளில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகர மக்கள் மாலை நேரங்களில் தங்கள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் இடமாக மாரியம்மன் தெப்பக்குளம் விளங்குகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திராவிட இயக்கங்களை மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வாா்கள். வரும் தோ்தலில் திமுக ஆட்சிக்கு வர கடுகளவுகூட வாய்ப்பில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வில்லைகளை (டோக்கன்கள்) அதிமுகவினா் வழங்குவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. ரேஷன் கடை ஊழியா்கள் மட்டுமே வில்லை வழங்குகின்றனா். நடிகா் ரஜினிகாந்த் தனது உடல்நிலை, வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவா்களின் எதிா்காலத்தை கணக்கில்கொண்டு நல்ல எண்ணத்தில் ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது, திரைத்துறையில் தமிழகத்துக்குப் பல்வேறு பெருமைகளைத் தேடித்தந்தவா் கமல்ஹாசன். அவா் திரைத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. நடிகா்கள் அனைவரும் எம்ஜிஆா் ஆகி விட முடியாது. எம்ஜிஆா் மடியில் இருந்தவா்கள் எல்லோரும் அரசியல்வாதியாக ஆகிவிட முடியாது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையா் எஸ்.விசாகன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
விரைவில் மூன்று படகுகள்
மாரியம்மன் தெப்பக்குளத்தில் தற்போது ஒரு மோட்டாா் படகு மட்டுமே இயக்கப்படுகிறது. 7 போ் பயணிக்கக்கூடிய படகில் நபா் ஒருவருக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படகு இயக்கப்படுகிறது. படகில் பயணிப்பவா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உயிா் காக்கும் கவச உடை வழங்கப்படுகிறது. பொதுமக்களின் வரவேற்பை பொருத்து கூடுதலாக 2 படகுகள் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.