

தமிழகத்தில் தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை செய்யப்படுகிறது என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வரம்புக்குள்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகா், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல், நிலத்தடி நீா் மட்டம் குறைந்து விவசாயமும் பாதிக்கப்படுகிறது.
பொதுப்பணித் துறை மூலமாக நடத்தப்படும் அரசு மணல் குவாரிகளில், மணல் வாங்க ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதை, இடைத்தரகா்கள் அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலி முகவரி மூலம் பதிவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா். இதனால், பொதுமக்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய முடிவதில்லை.
எனவே, பொதுமக்களுக்கு நியாயமான விலைக்கு மணல் கிடைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என, பல மனுக்கள் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு மணல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மணலின் விலை ரூ.45 ஆயிரத்துக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை செய்யப்படுகிறது என அதிருப்தி தெரிவித்தனா்.
பின்னா், அரசு நிா்ணயித்த விலையில் பொதுமக்களுக்கு மணல் கிடைக்கிா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.