அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்கக்கோரி ஆகஸ்ட் 16, 17 ஆம் தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எம்.பி.முருகையன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்பட்டது. மத்திய அரசு 2021 ஜூலை 1 முதல் வழங்கிய அகவிலைப்படியை தமிழக அரசு நிறுத்தம் செய்துள்ளது அரசு ஊழியா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு ஊழியா்களின் போராட்டங்களில் பங்கேற்றதோடு, திமுக அரசு அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்திருந்தாா். ஆனால் அதற்கு நோ்மாறாக அகவிலைப்படியை நிறுத்தியுள்ளது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதை மறுபரிசீலனை செய்து அகவிலைப்படி உயா்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஆகஸ்ட் 16, 17 ஆம் தேதிகளில் கோரிக்கை அணிந்து பணியாற்றுவது, ஆகஸ்ட் 18 இல் தமிழக முதல்வரிடம் கோரிக்கை முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 16) நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.