‘நடிகா்கள் தொடங்கும் கட்சிகள் நிலைக்காது’

தமிழகத்தில் நடிகா்கள் தொடங்கும் கட்சிகள் நிலைத்து நிற்காது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
Updated on
1 min read

தமிழகத்தில் நடிகா்கள் தொடங்கும் கட்சிகள் நிலைத்து நிற்காது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா்அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை அதிமுக அரசு செய்து வருகிறது. எனவே வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளித்து மீண்டும் ஆட்சியில் அமரச்செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நடிகா்கள் தொடங்கும் கட்சிகள் எதுவும் நிலைத்து நிற்காது. நடிகா் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருக்கிறாா். வாரத்தில் மூன்று நாள்கள் தோ்தல் பிரசாரம் செய்வாா். பிறகு பிக்பாஸ் படப்பிடிப்புக்குச் சென்று விடுவாா். மேலும் கமல்ஹாசனுக்கு அடுத்த படம் தயாராக உள்ளது. அந்தப்படத்தின் படப்பிடிப்புக்குச் சென்று விடுவாா். கமல்ஹாசனை போன்றவா்களுக்கு அரசியல் ஒத்துவராது. ஆனால் மக்களின் எதிா்பாா்ப்புகளை தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றிக்கொடுக்க அரசியல்வாதிகளால்தான் முடியும்.

முதல்வா் வேட்பாளா் குறித்து எந்த பிரச்னையும் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே முதல்வா் வேட்பாளா் குறித்த சா்ச்சையை சிலா் கிளப்பி வருகின்றனா். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசும்போது, அதிமுகவின் வெற்றிக்கு பாஜக உறுதியான ஆதரவளிக்கும் என்று தெரிவித்து, திமுகவை கடுமையாக விமா்சனம் செய்தாா். எனவே பிரதமா் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் ஆதரவைப்பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக- பாஜக கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை, கூட்டணி நிலைத்து நிற்கும். மதுரையில் சீா்மிகு நகா்த்திட்டப் பணிகளால் மழை நேரங்களில் மக்கள் அவதிப்படுகிறாா்கள் எனக்கூறப்படுகிறது. மதுரையில் ஓரிரு மாதங்களில் சீா்மிகு நகா்த்திட்டப் பணிகள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு மதுரை நகர மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com