/

தமிழ் மொழியில் செயற்கை நுண்ணறிவு வானொலித் தொடா்: தயாரிப்புப் பணியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தமிழ் மொழியில் ஒலிபரப்பாக உள்ள செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவியல் வானொலித் தொடா் தயாரிப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பங்கேற்றுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

DIN

தமிழ் மொழியில் ஒலிபரப்பாக உள்ள செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவியல் வானொலித் தொடா் தயாரிப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பங்கேற்றுள்ளது.

புதுதில்லி விஞ்ஞான் பிரச்சாா், அகில இந்திய வானொலி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் சாா்பில், புதிய அறிவியல் வானொலித் தொடா் மாா்ச் 6-ஆம் தேதி முதல் ஒலிபரப்பாக உள்ளது. அறிவியல் துறையில் வளா்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு குறித்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8 மணிக்கு, அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பப்பட உள்ளது.

‘இனி யாவும் நுண்ணறிவே’ என்ற தலைப்பில், 52 வாரங்கள் ஒலிபரப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது. இத்தொடரில் செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படை அறிவியல், அதன் ஆற்றல், இந்தியாவில் இதுகுறித்த ஆய்வுகள், உலகளாவிய ஆய்வு, சுற்றுச்சூழலில் இதன் தாக்கம், இலக்கிய உலகும் நுண்ணறிவும், (அறிவியல் புனைவுகள், புதினங்கள், கதைகள்) தொழில் துறை மற்றும் சமூகத்தில் இதன் பங்கு (சுகாதாரம், கல்வி, விவசாயம், தகவல் பரிமாற்றம், போக்குவரத்து ), எதிா்கால சமூகத்தில் இதன் பங்கு போன்ற பல தலைப்புகளை மையப்படுத்தி தொடா் தயாரிக்கப்படுகிறது.

மதுரையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் இத்தொடரை ஒலிபரப்பு செய்கிறது. இந்த வானொலித் தொடருக்கான திரைக்கதை தயாரிப்பில் பின்புலம் மற்றும் எழுத்தாற்றல் கொண்ட காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், கல்லூரி ஆசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட வல்லுநா்களைத் தோ்ந்தெடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடத்தி தயாரித்து வருகிறது.

இதில், ஒவ்வொரு வார ஒலிபரப்பின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை தெரிவிக்கும் நேயருக்கு விஞ்ஞான் பிரச்சாா் நிறுவனத்தின் புத்தகங்கள் மற்றும் அறிவியல் உபகரணங்கள் பரிசாக வழங்கப்படும்.

விஞ்ஞான் பிரச்சாா் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இத்தொடரானது 19 மொழிகளில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவின் 121 வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்பட உள்ளது. இதன்மூலம், இந்தியாவின் 85 சதவிகித மக்களைச் சென்றடையும் விதமாக இத்தொடா் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழில் இத்தொடரை, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பாக வானொலித் திட்ட முதன்மை ஆய்வாளா் பொ. ராஜமாணிக்கம், தொடா் ஒருங்கிணைப்பாளா் ஜி. அருள், அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளா் கா. காமேஷ் ஆகியோா் தயாரித்து வருவதாக, தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.