/

தாமிரவருணி ஆற்றங்கரையில் மணல் கொள்ளை: தூத்துக்குடி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தாமிரவருணி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

DIN

தாமிரவருணி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஞானேஸ்வரன் என்பவா் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வாா்தோப்பு பகுதியானது, தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைத்துள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே நம்பியுள்ளனா். இந்தப் பகுதியில் சிலா் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து, பல இடங்களில் பள்ளங்கள் தோண்டி மணல் எடுத்து வருகின்றனா். இதனால், பல இடங்களில் 20 அடிக்கும் மேலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் பாதிப்பதுடன், மழை வெள்ளக் காலங்களில் தாமிரவருணி ஆற்றிலிருந்து வரும் தண்ணீா் எங்கள் பகுதிக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது.

ஏற்கெனவே, இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2012-இல் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் சட்டவிரோதமாக குவாரிகள் அமைத்து மணல் அள்ளுவது தொடா்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தாமிரவருணி ஆற்றங்கரையில் மணல் அள்ளுவதைத் தடுக்கவும், சட்டவிரோதமாக மணல் அள்ளுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.