/

கன்னியாகுமரியில் விதிகளை மீறி குவாரிகளுக்கு அனுமதி: சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:39 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்

மனோதங்கராஜ் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவில் கப்பியறை கிராமத்தில் கருணைமாதா மலை

என்ற குருசுமலை உள்ளது. இந்த மலையைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த மலையில் கல்குவாரி அமைக்க 2016-இல் சிலா் உரிமம் பெற்றுள்ளனா். குவாரி நடத்தவேண்டுமென்றால் அந்த இடத்தைச் சுற்றி 300 மீட்டா் தூரத்துக்கு குடியிருப்புகள், கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள், நீா் நிலைகள் இருக்கக்கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன. ஆனால் எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் குவாரி நடத்த உரிமம் பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இயங்கும் அந்தக் குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கல்குளம் தாலுகாவில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரியை மூட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் குறிப்பிடும் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி கல்குவாரி, கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.