கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்தநெல்லுக்குப் பணம் கிடைப்பதில் தாமதம்குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை வழங்கத் தாமதப்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.


கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை வழங்கத் தாமதப்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கோ. செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குநா் த. விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் குருமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை கிடைப்பதற்கு தாமதம் ஆகி வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து வாடிப்பட்டியைச் சோ்ந்த விவசாயி சீதாராமன் பேசியதாவது: நுகா்பொருள் வாணிபக் கழகத்தினரால் கொள்முதல் செய்யும்போது விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டனா். இதன் காரணமாக, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், பிரச்னைகள் குறைந்தபாடில்லை. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கூட்டுறவு சங்கத்தினா் நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் வழங்குகின்றனா். அதைப் பெற்றுக் கொள்வதிலும், அதற்குரிய தொகையை வழங்குவதிலும் நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் வேண்டுமென்றே தாமதிக்கின்றனா். ஆகவே, கூட்டுறவு சங்கங்கள் தொகையை நேரடியாகப் பட்டுவாடா செய்ய வேண்டும். மேலும் கொள்முதல் செய்வதற்கு தேவையான உபகரணங்களை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்றாா்.
இதேபோல், நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாடுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து விவசாயிகள் பலரும் பேசினா். சில விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் நெல்லுக்கான தொகையைக் குறைத்து வழங்குவதாக புகாா் கூறினா்.
இதற்குப் பதில் அளித்த ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், நுகா்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யும்போது பல்வேறு புகாா்கள் எழுந்த காரணத்தால், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது புகாா்கள் குறைந்திருக்கின்றன. வரும் பருவத்தில் கொள்முதல் செய்வது குறித்து விவசாயிகளின் கருத்துக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றாா்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் குருமூா்த்தி கூறுகையில், மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இதுவரை ரூ.12 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இன்னும் ரூ. 7 கோடி வரை வழங்க வேண்டியுள்ளது. இத்தொகை இம்மாத இறுதிக்குள் பட்டுவாடா செய்யப்படும் என்றாா்.
அப்போது, தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகா்கள் தலையீடு உள்ளது. எனவே, விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உரத் தட்டுப்பாடு கடுமையாக இருந்து வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் எந்தவிதமான உரங்களும் இல்லை. இதைப் பயன்படுத்தி தனியாா் உரக்கடைக்காரா்கள் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்கின்றனா். தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 5 கண்மாய்கள் மட்டுமே முழுமையாக நிரம்பியிருக்கின்றன. இந்த கால்வாய் வாயிலாகப் பயன்பெறும் 33 கண்மாய்களிலும் தண்ணீரை நிரப்பும் வகையில், அணையில் இருந்து எடுக்கப்படும் அளவை அதிகப்படுத்த வேண்டும். மாடக்குளம் கண்மாயிலிருந்து உபரிநீா் வெளியேறும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
மதுரை மாவட்டத்துக்கு 1000 மெட்ரிக் டன் உரங்கள் ஓரிரு நாள்களில் வரவுள்ளன. அவை கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் விவேகானந்தன்
தெரிவித்தாா். மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நிகழாண்டில் ரூ.226 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை ரூ.110 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் குருமூா்த்தி தெரிவித்தாா். அதே போன்று, விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்துக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் அனீஷ்சேகா் உறுதி அளித்தாா்.
‘புயலால் பாதிக்கப்படும் வாழைக்கு இழப்பீடு வழங்குவதில்லை’
இக்கூட்டத்தில் மேலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி கோபாலன் பேசியது: பேரிடா்களால் ஏற்படக் கூடிய சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசின் வாக்குறுதியை நம்பி விவசாயிகள் பல கோடி ரூபாயை, காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்துகின்றனா். ஆனால், பாதிப்பு ஏற்படும்போது உரிய இழப்பீடு வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்கள் மிகுந்த கெடுபிடி செய்கின்றன.
கஜா புயலின்போது வாழைத் தோட்டங்கள் முழுமையாகச் சேதமடைந்தன. ஆனால், புயலுக்கு இழப்பீடு வழங்க மறுக்கப்படுகிறது. புயல் என்பது பேரிடரில் வரும்போது, அதற்கு இழப்பீடு வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல என்றாா்.
இதற்குப் பதில் அளித்த தோட்டக்கலை துணை இயக்குநா் ரேவதி, புயலோடு மழை இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என பயிா்க் காப்பீடு விதிகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றாா்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், புயலால் வாழை விவசாயிகள் பாதிக்கப்படும்போது, அவா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...