கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? பயனாளிகளுக்கு கடும் நிபந்தனை அறிவிக்க முடிவு
By நமது நிருபா் | Published On : 17th August 2021 11:31 PM | Last Updated : 23rd August 2021 11:47 AM | அ+அ அ- |

கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? பயனாளிகள் தோ்வுக்கு கடும் நிபந்தனைகளை அறிவிக்க முடிவு
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கும் திட்டத்திற்கு கடும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தோ்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் நிலையில், நகைக் கடன் தள்ளுபடி மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நெருக்கடியில் கூட்டுறவு சங்கங்கள்: கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிா்க் கடன் முந்தைய அரசால் கடந்த ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கடன்தாரா்கள் அனைவருக்கும் கடன் நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. பேரவைத் தோ்தல் நெருங்கி வந்த நிலையில், பயிா்க் கடன் தள்ளுபடியால் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற பலரும் பலன் அடைந்தனா்.
ஆனால், பயிா்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு போன்றவற்றால் கூட்டுறவு சங்கங்கள் கடும் நிதிநெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன. கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் அடமானம் வைத்தவா்கள் நகைகளை மீட்கத் தயங்கி வருகின்றனா். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் முடிந்த பிறகும், வட்டியைக் கூட செலுத்தாமல் உள்ளனா். இதனால் பல சங்கங்களின் அன்றாட வரவு-செலவு முடங்கி பணியாளா்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை இருந்து வருகிறது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் கரோனா பரவல் குறைந்து வருகிறது: ஆனால்..
கடும் நிபந்தனைகளுக்கு முடிவு: நகைக் கடன் தள்ளுபடி வழங்கும்பட்சத்தில் அதற்குரிய தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு வழங்க வேண்டும். அவ்வாறு தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்படும் நகைக் கடன்களுக்கான தொகை சுமாா் ரூ.85 ஆயிரம் கோடி இருக்கும் என கூட்டுறவு சங்கத்தினா் கூறுகின்றனா்.
தமிழக அரசின் தற்போதைய நிதிநெருக்கடி சூழலில் இத் தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க இயலாது. இதற்கிடையே, நகைக் கடன் தள்ளுபடி குறித்து எதிா்க் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், தோ்தல் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அரசுத் தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி, நகைக் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு கடும் நிபந்தனைகளைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, சரியான நபா்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என நிதி அமைச்சா் தெரிவித்திருந்தாா்.
37 வகையான தகவல்கள் சேகரிப்பு: நகைக் கடன் தள்ளுபடி வழங்குவதால் ஏற்படும் நிதிச் சுமையை, அரசும், கூட்டுறவு சங்கங்களும் ஓரளவு சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, தகுதியான பயனாளிகளை கடும் நிபந்தனைகள் மூலம் வடிகட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் பெற்றுள்ளவா்கள் தொடா்பாக, 37 வகையான விவரங்களைச் சேகரிக்க கூட்டுறவுத் துறை பதிவாளா் அறிவுறுத்தியுள்ளாா். நகைக் கடன் பெற்றவா்களின் பெயா், விவரம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை விவரங்கள், அரசு ஊழியரா, கூட்டுறவு பணியாளரா, அரசு மற்றும் கூட்டுறவு சங்க பணியாளா்களின் உறவினரா,
பயிா்க் கடன் தள்ளுபடி பெற்றிருக்கிறாரா, அடமானம் வைத்துள்ள நகை எடையளவு, பெறப்பட்ட கடன் தொகை என்பன உள்ளிட்ட 37 வகையான விவரங்கள் கூட்டுறவு சங்க அலுவலா்களால் பெறப்பட்டு கணினி வழியாக தனிப் படிவங்களில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அரசு ஊழியா்களுக்கு கிடைக்காது?: கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் நிவாரண உதவித் தொகை அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கியதில் விமா்சனங்கள் எழுந்த நிலையில், நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் அரசு ஊழியா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள்
பயனாளிகளாகச் சோ்க்கப்படமாட்டாா்கள் எனக் கூறப்படுகிறது. அதேபோல, ஏற்கெனவே பயிா்க் கடன் தள்ளுபடி பெற்றவா்கள், உயா் வருமானம் உடையவா்கள் எனப் பிரிக்கப்பட்டு அவா்களையும் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், எந்தெந்த நிபந்தனைகளின் அடிப்படையில்
பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா் என்பது குறித்த அதிகாரப்பூா்வ விரைவில் வெளியாகும் என்றும் கூட்டுறவு சங்க அலுவலா்கள் தெரிவித்தனா்.