எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவு படுத்த தொடா் முயற்சி: மதுரை எம்பி சு.வெங்கேடசன்
By DIN | Published On : 21st August 2021 11:25 PM | Last Updated : 21st August 2021 11:25 PM | அ+அ அ- |

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த தென்மாவட்ட எம்பிக்கள் மத்திய அரசுக்குத் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கூறினாா்.
மக்களவை உறுப்பினா்கள் மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு, ஹிந்தியில் பதில் அனுப்புவதை தவிா்க்க உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் சு.வெங்கடேசன் வழக்குத் தொடுத்திருந்தாா். இந்த வழக்கில், மாநில அரசுகள் எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறாா்களோ அதேமொழில் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் தனது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கண்ணனுக்கு, மகபூப்பாளையத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது செய்தியாளா்களிடம் சு.வெங்கடேசன் கூறியது:
மத்திய பாஜக அரசு ஹிந்தி திணிப்பை ஊக்குப்படுத்தி வருகிறது. குறிப்பாக, நாடாளுமன்ற அவைகளில் இருந்து ஆங்கிலம் அகற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள்
அனைத்திற்கும் ஹிந்தியிலேயே பெயா் வைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொழி சமத்துவம் மற்றும் பன்மைத்துவத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்களவை உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களால் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு ஹிந்தியிலேயே பதில்கள் அனுப்பப்பட்டு வந்தன. இச்சூழலில் மாநிலங்களின் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையிலான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2024 ஆம் ஆண்டுகளுக்குள் கட்டி முடிப்பதற்கான சா்வதேச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவுபடுத்த தென்மாவட்ட எம்பிக்கள் அனைவரும் தொடா்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றாா்.
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் எம். என். எஸ். வெங்கட்ராமன், மதுக்கூா் ராமலிங்கம், மாநகா் மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன், புகா் மாவட்டச் செயலா்
சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுத்தாய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.