யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடங்களின் சிசிடிவி பதிவுகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

மதுரை உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடங்களின் சிசிடிவி பதிவுகளைச் சமா்பிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:10 pm

DIN

மதுரை உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடங்களின் சிசிடிவி பதிவுகளைச் சமா்பிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பிரேதப் பரிசோதனைகளையும் விடியோ பதிவு செய்யவும், பிரேதப் பரிசோதனை மையங்களுக்கு அறிவியல் அலுவலா்களை நியமிக்கவும் உத்தரவிடக் கோரி

வழக்குரைஞா் அருண் சுவாமிநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரேதப் பரிசோதனைகளின்போது நிகழும் குளறுபடிகள், முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2020-இல், அரசுக்குப் பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அறிவியல் அலுவலா்களை நியமிக்க வேண்டும். அவா்களது தகுதி, கடமைகளை வரையறுக்க நிபுணா் குழுவை அமைக்க வேண்டும். அனைத்துப் பிரேதப் பரிசோதனைகளும் விடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவில் மாறுதல்கள் கோரி அரசுத் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவின்படி அறிவியல் அலுவலா் நியமனத்துக்கான நிபுணா்வு குழு அமைக்கப்பட்டது. அக் குழுவின் அறிக்கையில், தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே அறிவியல் அலுவலா்கள் பணிபுரிகின்றனா். 90 சதவீத பிரேத பரிசோதனைகள் அறிவியல் அலுவலா்களின் உதவியின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அறிவியல் அலுவலா்கள் எம்ஏ குற்றவியல் பாடத்தில் தகுதி பெற்றவா்கள். மருத்துவ அறிவியல் தொடா்பாக அவா்களுக்கு நிபுணத்துவம் இல்லை. ஆகவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனை செய்யும்போது, அறிவியல் அலுவலா்களை நியமிக்கத் தேவையில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அறிவியல் அலுவலா்களை நியமிப்பது தொடா்பான உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், எஸ்.ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த நீதிமன்றம் 2020-இல் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, பிரேதப் பரிசோதனைக் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் பிரேதப் பரிசோதனைக் கூடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் கடைசி 3 நாள்களில் பதிவான காட்சிகளை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.