ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அரசு மருத்துவமனைகளுக்கு ரொட்டி பாக்கெட் விநியோகம்: ஒப்பந்தப்புள்ளியை கைப்பற்றியது மதுரை மத்திய சிறை

மதுரை, தேனி உள்ளிட்ட அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரொட்டி பாக்கெட் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை, மதுரை மத்திய சிறை கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:24 pm

DIN

மதுரை, தேனி உள்ளிட்ட அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரொட்டி பாக்கெட் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை, மதுரை மத்திய சிறை கைப்பற்றியுள்ளது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மறு வாழ்வுக்காக, சிறையிலேயே அவா்களுக்கு பல்வேறு தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. மேலும், அரசு அலுவலகங்களுக்கு தேவையான தபால் உறைகள், காகித உறைகள், கோப்புகள் உள்ளிட்டவை தயாரித்து வழங்கப்படுகின்றன.

மதுரை மத்திய சிறை வளாகத்தில் நா்சரி காா்டன் அமைக்கப்பட்டு, பல்வேறு வகையான செடிகள் விற்பனை, உணவகம் மூலம் உணவு விற்பனை, இறைச்சி விற்பனை ஆகியனவும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், சிறை நிா்வாகத்துக்கும், சிறைவாசிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய சிறையில் ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ரொட்டி பாக்கெட்டுகள், கேக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தேனி, திண்டுக்கல், விருதுநகா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு தினசரி காலையில் ரொட்டி பாக்கெட் வழங்கப்படுவது வழக்கம். இதற்காக, மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் மூலம் தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, அந்நிறுவனத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் ரொட்டி பாக்கெட் விநியோகிக்கப்பட்டு வந்தது.

அண்மையில், அரசு மருத்துவமனைகளுக்கு ரொட்டி பாக்கெட் விநியோகிப்பதற்காக நடைபெற்ற ஒப்பந்தப்புள்ளி திறப்பில், மதுரை மத்திய சிறையும் பங்கேற்றது. இதில், இதர நிறுவனங்களை விட, மதுரை மத்திய சிறை குறைந்த விலையை குறிப்பிட்டிருந்ததால், அரசு மருத்துவமனைகளுக்கு ரொட்டி பாக்கெட் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை மத்திய சிறை கைப்பற்றியது.

இதன்மூலம், மதுரை மத்திய சிறையிலிருந்து சிறைவாசிகளால் தரமாக ரொட்டி பாக்கெட் தயாரிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு தினசரி கொண்டுசெல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதன்படி, தினசரி 200 கிராம் கொண்ட 5 ஆயிரம் ரொட்டி பாக்கெட்டுகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு விநியோகிக்கப்படுவதாக, சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.