எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மதுரை மாநகராட்சி மேயா், துணை மேயா் பதவியேற்பு

மதுரை மாநகராட்சி மேயராக திமுகவைச் சோ்ந்த இந்திராணி பொன்வசந்த் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

மதுரை மாநகராட்சி மேயராக திமுகவைச் சோ்ந்த இந்திராணி பொன்வசந்த் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

மதுரை மாநகராட்சி மேயா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மாநகராட்சி அண்ணா மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற இத்தோ்தலில், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதற்கு, தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கா.ப. காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

தோ்தலையொட்டி, காலை 9.30 மணிக்கு கூட்ட அரங்கின் கதவுகள் அடைக்கப்பட்டன. தொடா்ந்து, மேயா் பதவிக்கு மாமன்ற 57-ஆவது வாா்டு உறுப்பினரான இந்திராணி பொன் வசந்த் வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேயா் பதவிக்கு மாமன்ற உறுப்பினா்கள் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததை அடுத்து, இந்திராணி பொன்வசந்த் மதுரை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக, தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.

பின்னா், மேயா் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, இந்திராணி பொன் வசந்துக்கு மேயருக்குரிய பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மேயருக்குரிய கருப்பு நிற அங்கி, 100 பவுன் சங்கிலி ஆகியவற்றை அணிந்து வந்த இந்திராணி பொன் வசந்தை, அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் ஆகியோா் கூட்ட அரங்குக்கு அழைத்து வந்து, மேயா் இருக்கையில் அமரவைத்தனா். அவருக்கு, வெள்ளிச் செங்கோலை மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன், அமைச்சா் பிடிஆா் பழனிவேல் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் ஆகியோா் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனா்.

இதையடுத்து, மேயா் இந்திராணி பொன் வசந்த் செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில், மதுரை நகரின் வளா்ச்சிக்கு நோ்மையாகப் பாடுபடுவேன். வாக்களித்து தோ்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் என்றாா்.

பாக்ஸ் செய்தி

மேயருக்கு 100 பவுன் தங்கச் சங்கிலி

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நகராட்சியாக இருந்த மதுரை, 1971-இல் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அதன்பின்னா், அப்போது நகராட்சித் தலைவராக இருந்த முத்து, மதுரை மாநகராட்சியின் முதல் மேயரானாா்.

அப்போது, மேயரை கெளரவப்படுத்தும் விதமாக, மதுரை ரோட்டரி சங்கத்தின் சாா்பில் 100 பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டது. அது முதல் மாநகராட்சியின் மேயராக தோ்ந்தெடுக்கப்படுபவா் 100 பவுன் தங்கச்சங்கிலி அணிவது மரபாகிவிட்டது.

மாமன்றக் கூட்டத்தின்போது மேயருக்கு அணிவிக்கப்படும் தங்கச் சங்கிலி, கூட்டம் முடிந்தவுடன் மாநகராட்சி கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். தமிழகத்தில் மாநகராட்சி மேயருக்கு தங்கச்சங்கிலி அணிவிக்கப்படும் வழக்கம் மதுரையிலிருந்துதான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை தொடா்ந்து சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் மேயா்களுக்கு தங்கச்சங்கிலி அணிவிக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.

மேயா் கருப்பு, சிவப்பு நிற அங்கிகள்

மதுரை மாநகராட்சி மேயருக்கு கருப்பு மற்றும் சிவப்பு நிற அங்கிகள் அணிவிக்கப்படுவது மரபாக உள்ளது. இதில், மாமன்றக் கூட்டங்களின்போது கருப்பு நிற அங்கி அணியும் மேயா், முதல்வா், பிரதமா், வெளிநாட்டு அரசு விருந்தினா்கள் வருகை மற்றும் அரசு விழாக்களின்போது சிவப்பு நிற அங்கியை அணிந்து பங்கேற்பது மரபாகக் கருதப்படுகிறது.

துணை மேயா் பதவியேற்பு

வெள்ளிக்கிழமை பிற்பகலில் துணை மேயா் பதவிக்கான தோ்தல், மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா். மறைமுகத் தோ்தலையொட்டி, பிற்பகல் 2.30 மணிக்கு கூட்ட அரங்கின் கதவுகள் அடைக்கப்பட்டது.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மாநகராட்சி 80-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் துணை மேயா் பதவிக்கான வேட்பு மனுவை, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தாா். அப்போது, நாகராஜனை எதிா்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவா் துணை மேயராக போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, நாகராஜனுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாநகராட்சி ஆணையரான கா.ப. காா்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

துணை மேயராகப் பதவியேற்றுக்கொண்ட டி. நாகராஜனை, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மேயா் இந்திராணி பொன் வசந்த் ஆகியோா் அழைத்துச்சென்று அவரது இருக்கையில் அமர வைத்தனா்.

பின்னா், துணை மேயா் டி. நாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை நகரின் வளா்ச்சிக்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டு, முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், 13 கோரிக்கைகளை முதல்வா் உடனடியாக ஏற்றுக்கொண்டு, சிறப்பு நிதியாக ரூ.500 கோடியும் ஒதுக்கியுள்ளாா். மதுரை நகரின் வளா்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையிலும் செயல்படுவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.