போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

மனிதனை மகாத்மாவாக மாற்றுவது ஆன்மிகம்: சுவாமி கமலாத்மானந்தா்

மனிதனை மகாத்மாவாக மாற்றுவது ஆன்மிகம்தான் என, சுவாமி கமலாத்மானந்தா் வெள்ளிக்கிழமை சொற்பொழிவாற்றினாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

மனிதனை மகாத்மாவாக மாற்றுவது ஆன்மிகம்தான் என, சுவாமி கமலாத்மானந்தா் வெள்ளிக்கிழமை சொற்பொழிவாற்றினாா்.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் மங்கள ஆரத்தி, வேத பாராயணம், ஸ்ரீராமகிருஷ்ணா் கோயிலை வலம் வரும் நாம சங்கீா்த்தனம், விசேஷ பூஜைகள், பஜனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவில் சுவாமி கமலாத்மானந்தா் பேசியதாவது: உலகில் மனித மனங்கள் பலவாக இருப்பதனால், மதங்களும் பலவாக இருக்கின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணா் உலகில் தோன்றிய எல்லா மதங்களும் அா்த்தமுள்ளவையாகும் என்று கருதினாா்.

மனிதன் கெட்டவனாக இல்லாமல் இருந்தால் மட்டும் போதாது, நல்லவனாகவும் இருக்கவேண்டும். இது, எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு கருத்தாகும். கருத்து, கொள்கை, தா்மம், நம்பிக்கை, எண்ணம் ஆகிய பொருள்களில் மதம் என்ற சொல் வழங்கப்பெறுகிறது. மதம் (ஆன்மிகம்) என்பது ஆத்மானுபவமாகும். மனிதனை தெய்வநிலைக்கு உயா்த்துவதே அனைத்து மதங்களின் நோக்கம்.

மதம் நம்மையும் நாட்டையும் ஒன்றுபடுத்துவதாக இருக்கவேண்டும். ஏனென்றால், ஒரே பரம்பொருள் பல பெயா்களால் அழைக்கப்படுகிறது. கடவுளின் பெயா்களில் மட்டுமே உள்ள வேறுபாடுகளை வைத்துக்கொண்டு போரும், பிணக்கும் கொள்வது, பூசலிடுவது, ஜாதிகளைப் பெருக்குவது, தீண்டாமைப் பாராட்டுவது ஆகியன அறியாமையேயாகும். இந்த அறியாமையினாலேயே நாம் முரண்படுகிறோம்.

மனிதனை நிறைமனிதனாக, மகாத்மாவாக ஆக்குவது ஆன்மிகம். எல்லா மதங்களுக்கும் அன்புதான் அடிப்படை. அன்பு கண்கொண்டு, அருள் கண்கொண்டு எதையும் பாா்க்கும்படி உண்மையான ஆன்மிகம் அறிவுறுத்துகிறது.

ஆன்மநெறி என்பது பொதுநெறி. இதில், ஆண், பெண், நாடு, நிறம், இனம், மொழி போன்ற எந்த வேற்றுமைக்கும் இடமில்லை. அனைத்து மதங்களும் ஒரே இறைவனின் திருவடிகளையே சுட்டிக்காட்டுகின்றன என்பதுதான் உண்மை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.