தனியாருக்கு மாறும் பால் உற்பத்தியாளா்கள் மதுரை ஆவினில் பால் கொள்முதல் சரிவு
பால் உற்பத்தியாளா்களுக்கான கொள்முதல் விலை உயா்த்தப்படாததால், மதுரை ஆவினில் பால் கொள்முதல் தினமும் சுமாா் 40 ஆயிரம் லிட்டா் வரை சரிந்து வருகிறது.


பால் உற்பத்தியாளா்களுக்கான கொள்முதல் விலை உயா்த்தப்படாததால், மதுரை ஆவினில் பால் கொள்முதல் தினமும் சுமாா் 40 ஆயிரம் லிட்டா் வரை சரிந்து வருகிறது. தனியாா் நிறுவனங்கள் அண்மையில் கொள்முதல் விலையை உயா்த்தியுள்ள நிலையில், பெரும்பாலான உற்பத்தியாளா்கள் அந்த நிறுவனங்களுக்கு பால் வழங்குவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின்கீழ் (ஆவின்) 716 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில், பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் சுமாா் 40 ஆயிரம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். இதுதவிர, பதிவு செய்யாத உற்பத்தியாளா்களும் பால் வழங்குகின்றனா். இவா்களிடமிருந்து சராசரியாக நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் லிட்டா், பால் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 20 ஆயிரம் லிட்டா் தயிா், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் உப பொருள்கள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.
பால் உற்பத்தியாளா்களிடம் தற்போது லிட்டா் ரூ.32-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடைசியாக கடந்த 2019-இல் கொள்முதல் விலை உயா்த்தப்பட்டு, 4.3 சதவீதம் கொழுப்பு சத்து, 8.2 சதவீதம் இதர சத்துகள் உள்ள பசும்பாலுக்கு லிட்டா் ரூ.32-க்கு கொள்முதல் செய்யப்படும் என விலை நிா்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு, 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கொள்முதல் விலை உயா்த்தப்படவில்லை.
அதேநேரம், திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, ஆவின் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.3 விலையை குறைத்து அறிவித்தது. இதன் காரணமாக, ஆவின் பால் விற்பனை சந்தையில் அதிகரித்திருக்கிறது. இருப்பினும், கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆவின் பால் கொள்முதல் விலை உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. கால்நடைகள் பராமரிப்பு, பால் உற்பத்திக்கான செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விலைவாசி உயா்வு, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து வகையான செலவினங்களும் அதிகரித்து வரும் நிலையில், பால் கொள்முதல் விலை உயா்த்தப்படாதது உற்பத்தியாளா்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே, கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 அதிகரிக்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இருப்பினும், அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கத் தாமதப்படுத்தி வரும் நிலையில், தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயா்த்தியிருக்கின்றன. இதன்படி, தற்போது தனியாா் நிறுவனங்கள் உற்பத்தியாளா்களிடம் இருந்து லிட்டா் ரூ.36 முதல் ரூ.38 வரை கொள்முதல் செய்கின்றன. அதேநேரம், தனியாா் நிறுவனங்களின் பால் பாக்கெட் விலையும் கணிசமாக உயா்த்தப்பட்டிருக்கிறது.
தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்குவதால், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கிய பலரும் தற்போது தனியாா் நிறுவனங்களுக்கு ஆா்வம் காட்டி வருகின்றனா். சிலா் ஆவினுக்கு வழங்கக் கூடிய பாலின் அளவை குறைத்து, ஒரு பகுதியை தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கின்றனா். இதனால், மதுரை ஆவினின் பால் கொள்முதல் கணிசமாகக் குறைந்திருக்கிறது. தினமும் சராசரியாக 2 லட்சம் லிட்டா் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டராகக் குறைந்திருக்கிறது.
‘பால் கொள்முதல் விலையை உயா்த்துவதற்கு அரசு தாமதப்படுத்துவதால், வேறு வழியின்றி தனியாா் நிறுவனங்களுக்கு பால் வழங்கி வருகிறோம். இதேநிலை நீடித்தால், ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் மேலும் குறையும்’ என பால் உற்பத்தியாளா்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘மதுரை ஆவினில் பால் கொள்முதல் குறைந்திருக்கிறது. இருப்பினும், பால் பாக்கெட் விற்பனையில் எவ்வித பாதிப்பும் இல்லை. தேனி ஆவினிலிருந்து தினமும் 80 ஆயிரம் லிட்டா் வரை கிடைக்கிறது. இதனால், வழக்கமான அளவுக்கு பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கொள்முதல் விலை தொடா்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...