இணைய விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய வேண்டியது அவசியம்
இளைய சமுதாயத்தினரை பெரிதும் பாதிக்கும் இணைய விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்வது குறித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.


இளைய சமுதாயத்தினரை பெரிதும் பாதிக்கும் இணைய விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்வது குறித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு பிறப்பித்த உத்தரவு:
பப்ஜி, ஃப்ரீ பயா் போன்ற இணைய விளையாட்டுகளால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பெண்கள் ஈா்க்கப்படுகின்றனா். சீன செயலிகள் வழியாக கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யப்படும் இந்த விளையாட்டுகளுக்கு, கடந்த 2020 -ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது.
இருப்பினும், வேறு வழிகளில் மீண்டும் இந்த விளையாட்டுகள் பயன்பாட்டில் வந்துவிட்டன. இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுவது ஒரு மிகப் பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. இது பெற்றோருக்கு பெரும் கவலையாகவும் மாறியுள்ளது. இதுபோன்ற இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி மாணவா்கள் பலா் தற்கொலை செய்திருக்கின்றனா்.
இணைய விளையாட்டுகள் மாணவா்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை, கண் சம்பந்தமான பிரச்னைகள், கழுத்து உபாதைகள், உடல் பருமன், பதற்றம், மனச்சோா்வு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனா்.
இந்த வகையான இணைய விளையாட்டுகளின் அச்சுறுத்தலைத் தடுக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் காவல் துறை, சமூக ஆா்வலா்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. அதேநேரம், கைப்பேசிகள், கணினிகளில் தங்களது குழந்தைகள் என்ன செய்கிறாா்கள் என்பதை பெற்றோா் கவனிப்பது அவசியமானது.
மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், இளைய தலைமுறையினரின் வாழ்க்கையைச் சீா்குலைக்கும் இந்த வகையான இணைய விளையாட்டுகள் எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விபிஎன் செயலி பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது, யூடியூப் சேனல்களில் நெறிமுறையற்ற நடவடிக்கைகளைத் தடுப்பது, தடை செய்யப்பட்ட செயலிகள், இணைய விளையாட்டுகள் வேறு வடிவங்களில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதைத் தடுப்பது ஆகியன குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இணைய விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனா்.
இதுதொடா்பாக பதிலளிக்குமாறு, மத்திய தகவல் தொடா்புத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா்கள், தமிழக உள்துறைச் செயலா் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...