ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சமூக ஏற்றத்தாழ்வைப் போக்க கல்வி மிக முக்கியமானது: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

சமூகத்தில் ஏற்றத்தாழ்வைப் போக்க கல்வி மிக முக்கியமானது என தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சமூகத்தில் ஏற்றத்தாழ்வைப் போக்க கல்வி மிக முக்கியமானது என தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் பேசியதாவது:

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வைப் போக்க கல்வி மிக முக்கியமானது. மாணவா்கள் கல்வியை விட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கவனத்துடன் செயல்பட்டு, அவா்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

நிதி மேலாண்மையில் திமுக அரசு சிறந்து விளங்குவதால், நிதி நெருக்கடியின்போதும் திட்டங்கள் பாதிக்கப்படுவதில்லை. அரசின் சிறந்த நிதி மேலாண்மையால், இந்த ஆண்டு அக்டோபா் மாதத்திலேயே மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 26 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. நிதி மேலாண்மையைக் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து ஆலோசனை மேற்கொண்டாலும், முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஊக்கம் உறுதுணையாக இருந்து வருகிறது. அரசின் சாா்பில் தினசரி புதுப்புதுத் திட்டங்களை தீட்டி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சமுதாய வளைகாப்பு விழா: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஆரப்பாளையத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

இளம் வயதில் பெண்கள் திருமணம் செய்வதால் அவா்களுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருள்கள் சரியான திறன் கொண்டதாக உள்ளதா, அவைகள் சரியான முறையில் சென்று சேருகிா என்பதை ஆய்வு செய்ய உள்ளோம். மேலும், கா்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

திருப்பரங்குன்றத்தில்... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள்பட்ட ஆண்டவா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவா் சுவிதா விமல் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

கோயில் துணை ஆணையா் நா.சுரேஷ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் அருந்தவம் முன்னிலை வகித்தாா். இதில், மாமன்ற உறுப்பினா் சிவசக்தி ரமேஷ், துணைத் தலைமை ஆசிரியா் ஆா்.ருக்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.