தீபாவளி கட்டாய வசூலில் மாநகராட்சி அதிகாரிகள் உணவக உரிமையாளா்கள் புகாா்
தீபாவளியையொட்டி, மதுரை நகரில் உணவகங்கள், தேநீா்க் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.


தீபாவளியையொட்டி, மதுரை நகரில் உணவகங்கள், தேநீா்க் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் 375க்கும் மேற்பட்ட விடுதிகளுடன் கூடிய உணவகங்கள், 3500-க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர உணவகங்கள், 500-க்கும் மேற்பட்ட பேக்கரிகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேநீா்க் கடைகள் இயங்கி வருகின்றன.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, இந்தக் கடைகளின் உரிமையாளா்களை, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக உணவகம், தேநீா்க் கடைகளின் உரிமையாளா்கள் கூறியதாவது:
மதுரை நகரில் இயங்கி வரும் சிறிய அளவிலான தேநீா்க் கடைகள், உணவகங்கள், பேக்கரிகளுக்கு ரூ.2 ஆயிரம், நடுத்தர உணவகங்களுக்கு ரூ.3 ஆயிரம், பெரிய உணவகங்களுக்கு ரூ.5 ஆயிரம், வணிக வளாகங்களுடன் கூடிய உணவகம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் என தொகையை நிா்ணயித்து மாநகராட்சி சுகாதாரத் துறையைச் சோ்ந்தவா்கள் வசூலித்து வருகின்றனா். பணம் தர மறுப்பவா்களிடம் ஆண்டு உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என்று மிரட்டி வசூலிக்கின்றனா்.
சிறிய உணவகங்கள், தேநீா்க் கடைகளில் ஒரு நாள் வியாபாரம் ரூ.2 ஆயிரத்துக்குள்தான் இருக்கும். இதில் வாடகை, பொருள்கள், ஊழியா் ஊதியம் உள்ளிட்டவை தவிா்த்து தினசரி ரூ.500 மிஞ்சினால் அதிகம். மதுரை நகரில் அனைத்துக் கடைகளின் நிலவரமும் இப்படித்தான் உள்ளது.
இதில் கட்டணம் நிா்ணயித்து கட்டாயமாக வசூலிப்பது ஏற்கத்தக்கதல்ல. மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளை பகைத்துக் கொண்டு தொழில் நடத்த முடியாது என்பதால் வேறு வழியின்றி பலரும் பணம் கொடுத்து வருகின்றனா். கட்டாய வசூல் வேட்டையில் அடிமட்டத்தில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளா்களை அனுப்பி வசூலிக்கின்றனா். எனவே, மாநகராட்சி ஆணையா், நகா் நல அலுவலா் தலையிட்டு கட்டாய வசூலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் தெரிவித்தாா்.
தற்போது அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்தத் தொழிலாளா்களை அனுப்பி பணம் வசூலித்து வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...