உசிலம்பட்டியில் கிராம பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 19th April 2022 01:57 PM | Last Updated : 19th April 2022 01:57 PM | அ+அ அ- |

கணவாய்ப்பட்டியில் கிராம பொதுமக்கள் சாலை மறியல்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று அரசு மருத்துவமனை முன்பு கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, பின்னர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிக்கு உட்பட்ட கணவாய்பட்டி சேர்ந்த ராஜயோக்கியம் மனைவி ஈஸ்வரி (55). இவர் திங்கள்கிழமை தோட்டத்திற்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்வயரை சரிசெய்து உள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சடலத்தை தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நநிலையில், கணவாய்ப்பட்டி கிராமத்தில் அறுந்து கிடந்த மின் வயரை இதுவரை மின்சார துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இறந்த பெண்மணிக்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்காத நிலையில், இதனை கண்டித்து கணவாய்ப்பட்டி கிராம பொதுமக்கள் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் அரசு மருத்துவமனை முன்பு அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் சமரசம் செய்து சாலை மறியலை கைவிட்டு அருகே இருந்த அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மின்சார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த பெண் ஈஸ்வரிக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் ஏற்றால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.