குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு சமரசமாக செல்கிறோம் என்பதை ஏற்க இயலாது: உயா் நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 05th August 2022 11:27 PM | Last Updated : 05th August 2022 11:27 PM | அ+அ அ- |

குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னா் சமரசமாகச் செல்கிறோம் என்பதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டு, நாகமலைப் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சாந்தியின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சோ்ந்தவா் தையல் கடைக்காரா் அா்ஷத். இவரிடம், ரூ.10 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளராகப் பணியாற்றிய சாந்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், தற்போது அவா் ஜாமீனில் உள்ளாா்.
இந்நிலையில், சாந்தி மற்றும் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி என்ற காா்த்திக் உள்ளிட்டோா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனா். அதில், புகாா் அளித்தவரும், நாங்களும் சமரசமாக செல்வது எனப் பேசித் தீா்வு கண்டுள்ளோம். எனவே, கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனு நீதிபதி வி. சிவஞானம் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரா் காவல் துறையில் பணியில் இருந்தபோது, பணம் பறித்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு, சமரசமாகச் செல்கிறோம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றாா்.
அப்போது, மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.