மின்சாரம் பாய்ந்து இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.9.07 லட்சம் இழப்பீடு: உயா் நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 05th August 2022 11:28 PM | Last Updated : 05th August 2022 11:28 PM | அ+அ அ- |

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.9.07 லட்சம் இழப்பீடு வழங்க மின்வாரியத்துக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சோ்ந்த லட்சுமி என்பவா் தாக்கல் செய்த மனு: எனது கணவா் பழனிசாமி, விவசாயப் பணிக்காக கடந்த 2016 இல் வயலுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மின்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த கேபிள் தொலைக்காட்சி வயா் அறுந்து, எனது கணவரின் தலையில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். உடல் கூறாய்வில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது குடும்பத்துக்கு கணவா் மட்டுமே மாதம் ரூ.15 ஆயிரம் வருமானம் ஈட்டி தந்துகொண்டிருந்தாா். கணவா் இறப்புக்குப் பிறகு நானும் எனது குழந்தையும் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மின்சாரம் பாய்ந்து எனது கணவா் உயிரிழந்ததற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆா். விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:
மின்கம்பத்துடன் சட்டவிரோதமாக கேபிள் தொலைக்காட்சி வயா் இணைக்கப்பட்டிருந்ததை அகற்றுவதற்கு, மின்வாரிய அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய விபத்து நிகழ்ந்திருக்காது. மனுதாரரின் கணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளாா் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரருக்கு 9 லட்சத்து 7 ஆயிரத்து 104 ரூபாயை 2016 ஜூன் 12 ஆம் தேதி முதல் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என, தமிழக மின்வாரியத் தலைவருக்கு உத்தரவிட்டு தீா்ப்பளித்தாா்.