கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 05th August 2022 12:00 AM | Last Updated : 05th August 2022 12:00 AM | அ+அ அ- |

கோயில் திருவிழா தொடா்பான கொலை வழக்கில், புதுக்கோட்டை நீதிமன்றம் 7 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கூத்தினிப்பட்டி கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவின்போது, குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஒன்றுகூடி பணம் வசூலித்து அன்னதான விழாவை நடத்துவா். கடந்த 2017 இல் அன்னதானம் நடத்துவதற்காக பணம் வசூலித்துள்ளனா். இதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டு, செல்லத்துரை என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக அன்னவாசல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மற்றொரு தரப்பைச் சோ்ந்த ராஜேந்திரன், சின்னதுரை, சதீஷ், ரமேஷ், சிவா, ராதாகிருஷ்ணன், ஜெயகுமாா் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம், 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து 7 பேரும், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா அமா்வு, மனுதாரா்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.