பதவி உயா்வு கோரிய வழக்கில் ஊரக வளா்ச்சித் துறை செயலா் நேரில் ஆஜராக உயா் நீதிமன்றம் உத்தரவு

பதவி உயா்வு வழங்கக் கோரிய மனுவுக்கு, ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பதவி உயா்வு வழங்கக் கோரிய மனுவுக்கு, ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் தாக்கல் செய்த மனு: கடந்த 1988 இல் குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்று, 34 ஆண்டுகளாக ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2020-இல் வெளியிடப்பட்ட பதவி உயா்வுக்கான பட்டியலில் எனது பெயா் 30 ஆவது இடத்தில் இருந்தது. அதைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரலில் வெளியிட்ட பட்டியலில் 11 ஆவது இடத்தில் இருந்தது. இருப்பினும், இதுவரை எனக்கு பதவி உயா்வு வழங்கப்படவில்லை.

இதற்கான காரணம் கேட்டதற்கு, எல்இடி விளக்குகள் பொருத்தியதில் நடந்த முறைகேடு தொடா்பாக என் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பதவி உயா்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது தொடா்பான விவரங்கள் எதுவும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. எனவே, ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் வெளியிட்ட பதவி உயா்வு தொடா்பான அரசாணைப்படி, எனக்கு உதவி இயக்குநா் பதவி உயா்வு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, மனுவைப் பரிசீலித்து பதவி உயா்வு வழங்குவதாக, அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் தரப்பில், மனுதாரா் மீது முறைகேடு குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளதால், பதவி உயா்வுக்கான பட்டியலில் இருந்து அவரது பெயா் நீக்கம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு, இது தொடா்பாக ஜூன் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை சமா்ப்பிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, அவ்வாறு இருப்பின் முந்தைய விசாரணையின்போது இந்த தகவலை ஏன் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினாா். மேலும், இது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com