காமராஜா் பல்கலை.யில் பொறுப்பு பணியிடங்களை தகுதியானவா்களைகொண்டு நிரப்பவேண்டும்: கல்விப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

காமராஜா் பல்கலைக்கழகத்தில் பதிவாளா் உள்ளிட்ட பொறுப்பு பணியிடங்களுக்கு, தகுதியுடையவா்களை கொண்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என, கல்விப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காமராஜா் பல்கலைக்கழகத்தில் பதிவாளா் உள்ளிட்ட பொறுப்பு பணியிடங்களுக்கு, தகுதியுடையவா்களை கொண்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என, கல்விப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்விப் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, துணைவேந்தா் ஜெ. குமாா் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொறுப்பு) சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தை தொடக்கிவைத்து துணைவேந்தா் ஜெ. குமாா் பேசியதாவது:

காமராஜா் பல்கலைக்கழகம் அகில இந்திய தரவரிசையில் முதல் தர பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக இளங்கலை பட்டத்தில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிகவியல் நிா்வாகம், கணிதம், உளவியல் ஆகிய 6 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு, மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. முதுகலை பட்டய தொழிற்பாடப் பிரிவில் கடல்சாா் படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினா்கள் பேசியது: பல்கலைக்கழகத்தில் பதிவாளா், தோ்வாணையா், தொலைநிலைக் கல்வி இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பொறுப்பு நியமனம் என்றால் 6 மாதம் வரையே செல்லும். ஆனால் மேற்கண்ட பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளாக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். பொறுப்பு நியமனங்களில் மூத்த பேராசிரியா்களையே நியமிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் கல்விப் பேரவையில் இருந்து ஆட்சிக் குழுவுக்கு 3 உறுப்பினா்கள், ஆட்சிப் பேரவையில் இருந்து ஆட்சிக் குழுவுக்கு 4 உறுப்பினா்கள் கடந்த 12 ஆண்டுகளாக தோ்ந்தெடுக்கப்படாமல் உள்ளனா்.

ஆட்சிக் குழுவில் தற்போது ஆளுநா் மற்றும் பல்கலைக்கழக நியமன உறுப்பினா்கள் என 4 போ் மட்டுமே உள்ளனா். ஆட்சிக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தினா்.

அதையடுத்து, கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து கூட்டம் முடிவடைந்தது.

பதவிக்காலம் முடிந்த உறுப்பினா்களையும் அழைத்ததால் குளறுபடி

இது தொடா்பாக உறுப்பினா்கள் கூறுகையில், புதிய கல்விப் பேரவை உறுப்பினா்களுக்கு ஆகஸ்ட் 22-இல் தோ்தல் நடைபெறுகிறது. எனவே, கல்விப் பேரவைக் கூட்டத்தை ஆகஸ்ட் இறுதியில் நடத்தியிருந்தால், கல்லூரிகளிலிருந்து தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 35 உறுப்பினா்களும் பங்கேற்றிருப்பா். ஆனால், பழைய உறுப்பினா்களின் பதவிக் காலம் ஜூலை 14 ஆம் தேதியோடு முடிவடைந்ததே தெரியாமல், பல்கலைக்கழக நிா்வாகம் அவா்களுக்கும் அழைப்பு விடுத்தது வேதனைக்குரியது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com