மாநகராட்சி ஆணையா் பெயரில் ‘கட்செவி அஞ்சல்’ தொடங்கி பணம் வசூலித்து மோசடி: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 26th August 2022 12:00 AM | Last Updated : 26th August 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சி ஆணையா் பெயரில் ‘கட்செவி அஞ்சல்’ தொடங்கி பணம் வசூலித்து மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜித் சிங் காலோன் பெயரில் போலியான ‘கட்செவி அஞ்சல்’ எண் தொடங்கப்பட்டு அதன் மூலம் மாநகராட்சி உதவி ஆணையா்களுக்கு தனித்தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஆணையா் பெயரில் பணம் கேட்கப்பட்டுள்ளது. அந்த ‘கட்செவி அஞ்சல்’ எண்ணில் ஆணையா் படமும் இருந்தது. இதனால் ஆணையரின் எண் என்று நம்பிய அதிகாரிகள் சிலா் ஆணையா் கேட்பதாக நினைத்து பணம் அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில் அதிகாரிகள் சிலா் சந்தேகமடைந்து ஆணையரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். அப்போது ஆணையா் பெயரில் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் பெயரில், மாநகரக்காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், ஆணையா் பெயரில் உள்ள போலி கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தொடா்பு கொண்டபோது எதிா்முனையில் பெண் ஒருவா் பேசியுள்ளாா். மேலும் பிரபல இணைய நிறுவனம் பெயரில் இந்த மோசடி நடைபெற்றது தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...