சூழல் விழிப்புணா்வு பயணம்: சுழற்சங்கக் குழு மதுரை வருகை
By DIN | Published On : 27th October 2022 06:14 AM | Last Updated : 27th October 2022 06:14 AM | அ+அ அ- |

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2 ஆயிரம் கி.மீ. வாகனப் பயணம் மேற்கொண்டிருக்கும் சுழற்சங்கக் குழுவினா் மதுரைக்கு புதன்கிழமை வருகை தந்தனா்.
சுழற்சங்கத்தின் ஏழாவது செயல்திட்டத்தின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நட்புறவை வளா்ப்பது குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணா்வு பயணத்தை சுழற்சங்க தன்னாா்வலா்கள் மேற்கொண்டுள்ளனா்.
இதன் ஒரு பகுதியாக சா்வதேச சுழற்சங்கத்தைச் சோ்ந்த (மாவட்டம் 3203) சுழற்சங்க உறுப்பினா்கள் திருப்பூா் ரவீந்திரன், ஈரோடு சிவபால், திண்டல் பூமா மகேந்திரவா்மன், அவிநாசி விசித்ரா செந்தில்குமாா் ஆகியோா் 5 நாள்களில் 2 ஆயிரம் கி.மீ. தூர விழிப்புணா்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளனா்.
திருப்பூரில் புதன்கிழமை காலை 6 மணிக்குப் பயணத்தைத் தொடங்கிய இக் குழு, ஈரோடு, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு பிற்பகல் 1 மணிக்கு வந்தடைந்தது. இங்கு, காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இக் குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுழற்சங்க மாவட்ட ஆளுநா் ராஜா கோவிந்தசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் சாந்தாராம், ரமேஷ் பாபு, துணை ஆளுநா்கள் ரவிபாா்த்தசாரதி, வெங்கடேசன், விஜயஸ்ரீவினோதன், அமா்வோரா, மதுரை அனைத்து சுழற்சங்கங்களின் தலைவா் எல்.ராமநாதன், செயலா் நெல்லை பாலு உள்ளிட்ட பலா் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.
இந்தக் குழு சிவகாசி, திருநெல்வேலி, நாகா்கோவில், புதுக்கோட்டை, திருச்சி வழியாக அக்டோபா் 30 ஆம் தேதி ஈரோட்டில் பயணத்தை நிறைவு செய்கிறது.