மதுரையில் மாநாட்டு மையம்: முதல்வா் திறந்து வைத்தாா்
By DIN | Published On : 09th September 2022 12:43 AM | Last Updated : 09th September 2022 12:43 AM | அ+அ அ- |

சீா்மிகு நகா்த் திட்டத்தின் கீழ் மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள மதுரை மாநாட்டு மையம் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் அருகே பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில் சீா்மிகு நகா்த் திட்டத்தின் கீழ் ரூ.47.72 கோடி செலவில் மதுரை மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. தமுக்கம் மைதானத்தில் மொத்தமுள்ள 9.68 ஏக்கா் பரப்பரளவில் சுமாா் 2.47 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டு மையம் தரைமட்டத்துக்கு கீழ் ஒரு தளம் மற்றும் தரைதளம் ஆகியவற்றைக் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு மையம், அனைத்து அடிப்படை வசதிகளுடன் தொழில் மற்றும் வா்த்தக பொருள்காட்சி நடத்துவதற்கும், கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் சுமாா் 200 முதல் 3,500 நபா்கள் வரை பங்குகொள்ளும் வகையிலும் பல்வேறு அளவுகளில் உள்அரங்கத்தினை மாற்றி அமைக்கும் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தரைமட்டத்திற்கு கீழுள்ள தளத்தில் 234 நான்குசக்கர வாகனங்கள் மற்றும் 357 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் மீனாட்சியம்மன் கோயில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பழைய சென்ட்ரல் மாா்க்கெட் பகுதியில் ரூ.41.96 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இதில், 110 நான்குசக்கர வாகனங்கள் மற்றும் 1401 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் மையமும், புராதனச் சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி மையமும் கட்டப்பட்டுள்ளது.
இவற்றின் பணிகள் முடிவடைந்த நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநாட்டு மையம் மற்றும் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சட்டப் பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் .சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை மேயா் டி.நாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.