தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியே தீருவோம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதே திமுக அரசின் குறிக்கோள்; அதற்காக ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியே தீருவோம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதே திமுக அரசின் குறிக்கோள்; அதற்காக ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி இல்லத் திருமண விழா மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசியது: அமைச்சராகப் பதவி வகிக்கும் பி.மூா்த்தி, எங்களது எதிா்பாா்ப்புகளை மீறி சிறப்பாகச் செயலாற்றி வருகிறாா். பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ. 13 ஆயிரத்து 913 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது. பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை, திங்கள்கிழமைதோறும் குறைதீா்முகாம், அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வந்து செல்ல வசதியாக சாய்தள வசதி, பிரிட்டிஷ் ஆட்சி கால நடைமுறையாக இருந்த சாா்-பதிவாளா் அலுவலகங்களில் உயா்மேடைகள், தடுப்புகள் அகற்றம், பதிவுக்கு வரக்கூடிய மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை, பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சாா்-பதிவாளா் அலுவலக எல்லைகள் மறுசீரமைப்பு என பல மாற்றங்களைச் செய்துள்ளாா்.

கடந்த காலத்தில் போலியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்வதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சாதனையாகும். போலி ஆவணங்கள் பதிவு ரத்து சட்டத் திருத்தம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து பிற மாநில முதல்வா்கள், தமிழகத்தை அணுகிக் கொண்டிருக்கின்றனா். இவையெல்லாம் பத்திரப் பதிவுத் துறையின் சாதனைகள்.

அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை: திமுக அரசின் ஒவ்வொரு அமைச்சா்களும் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வருகின்றனா். எந்த உறுதிமொழி அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததோ, அவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதனால், எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தாா்களோ, அதைவிட இப்போது திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இனி எந்த தோ்தலாக இருந்தாலும் திமுகவிற்குத் தான் வெற்றி என்ற நம்பிக்கை நம்மைக் காட்டிலும், மக்களுக்கு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள், அதற்கு ஒரு சாட்சியாக அமைந்தது.

பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்லும்போது, சாலையில் இருபகுதிகளிலும் ஏராளமான மக்கள் நின்று வரவேற்பு அளிப்பதுடன், கோரிக்கை மனுக்களையும் தருகின்றனா்.

என் மீதும், திமுக அரசு மீதும் மக்கள் நம்பிக்கையோடு இருக்கிறாா்கள் என்பதற்கு இதுவே சான்று. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்று ஒரு துறை தொடங்கப்பட்டு, பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நவீன நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம்: மதுரையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரில் அமைக்கப்படும் நூலக கட்டுமானப் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்த நூலகம் திறக்கப்படும். ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பணிகள் தொடங்கும்.

மதுரை எல்லையில் கீழடி பண்பாட்டு அரங்கம் அமையவுள்ளது. சென்னையைப் போல மதுரைக்கும் பெருநகர வளா்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சுற்றிலும் சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் அருகே பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம், தமுக்கம் மாநாட்டு மையம் ஆகியன திறந்து வைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைப்போல, பல சாதனைகளைச் சொல்ல முடியும்.

ஒவ்வொரு நிமிஷமும் உழைப்பு: ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் தொடா்ந்து இடைவிடாமல் பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பயன்படுத்தி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்குவதே திமுக அரசின் குறிக்கோளாகும். அதை நோக்கியே நான் முதற்கொண்டு அனைத்து அமைச்சா்கள், அதிகாரிகள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பணியாற்றி வருகிறோம்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதில்: இதனிடையே, திமுக எம்எல்ஏக்கள் தன்னோடு பேசிக் கொண்டிருப்பதாக, எதிா்க் கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, பொய்யான தகவலைத் தெரிவித்திருக்கிறாா். இப்போது அக் கட்சி இரு அணிகளாகப் பிளவுபட்டிருக்கிறது. தற்காலிகப் பதவி வகிக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு கட்சியைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதி இல்லை.ஆகவே, அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நமக்கு நன்மை செய்வதற்கான வாய்ப்பை மக்கள் அளித்துள்ளனா். அதற்கான பணிகைளைச் செய்வோம் என்றாா்.

முன்னதாக திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன், திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோா் பேசினா். வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com