திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாக விழா!
By DIN | Published On : 02nd June 2023 09:04 AM | Last Updated : 02nd June 2023 01:15 PM | அ+அ அ- |

வைகாசி விசாகத்தை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சண்முகர், வள்ளி, தெய்வானை.
திருப்பரங்குன்றம்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து சண்முகர், வள்ளி தெய்வானையை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்காண விசாகத் திருவிழா, கடந்த மே 24-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் இரவு 8 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்துடன் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்கு புறப்பாடாவார். அங்கு வசந்த மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து அலகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். முக்கிய விழாவான வைகாசி விசாகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 4.30 மணியளவில் மணிக்கு சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது.
_.jpeg)
பின்னர் காலை 5.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். முதலில் தங்க குடம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு பக்தர்கள் கொண்டுவந்த பால் கொண்டு சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

விழாவினையொட்டி மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் பலர் பறவை காவடி எடுத்துவந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர்.

விழாவினையொட்டி கோயிலில் பலத்த போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோயில்வாசல், 16 கால்மண்டபம், திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதிகளில் உயர் மின் கோபுரம் அமைத்தும், சன்னதி தெரு, பெரியரத வீதி மற்றும் கோயிலுக்குள் பல்வேறு இடங்களில் கேமிராக்கள் பொருத்தியும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...