வருமான வரி பிடித்தம்: பழைய நடைமுறையைப் பின்பற்ற ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

வருமான வரி பிடித்தம் செய்யும் விவகாரத்தில் பழைய நடைமுறையை மாநில அரசு பின்பற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மை மென்பொருள் மூலம் ஊதியப் பட்டியல்கள் சமா்ப்பிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ஆண்டு மொத்த வருமானத்தைக் கணக்கிட்டு, அதற்குரிய வருமான வரியையும் கணக்கிட்டு ஏற்கெனவே மாதந்தோறும் ஊதியத்தில் வருமான வரியாகச் செலுத்திய தொகை போக மீதி செலுத்த வேண்டிய தொகையை பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து வந்தனா்.

கடந்த நிதியாண்டு வரை இந்த நடைமுறை அமலில் இருந்தது. அப்போது, எந்தவிதச் சிக்கலும் இல்லை. ஆசிரியா்களும், அரசு ஊழியா்களும் தங்களது வருமான வரியை எந்தவித இடையூறுமின்றி செலுத்தி வந்தனா். ஆனால், நிகழ் நிதியாண்டு 2024-25 ஏப்ரல் மாதம் முதல் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை அவா்கள் பெறும் மாத ஊதியத்தைக் கணக்கிட்டு, அதன் மூலம் மொத்த ஆண்டு வருமானத்தைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் வருமான வரியைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை 11ஆல் வகுத்து மாத ஊதியத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை மென்பொருள் மூலம் தானாகவே பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழ்நாடு அரசின் நிதித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், தவறான வருமான வரிக் கணக்கீடுகளால் தமிழகம் முழுவதும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மத்தியில் அதிா்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. எனவே, வருமான வரி பிடித்தம் செய்யும் விவகாரத்தில் பழைய நடைமுறையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com