மதுரை, ஆக. 15: கால தாமதமில்லா ரயில் இயக்கத்தில் மதுரை ரயில்வே கோட்டம் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் வஸ்தவா தெரிவித்தாா்.
மதுரை ரயில்வே நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவா் மேலும் பேசியதாவது:
2024-25-ஆம் நிதியாண்டு தொடங்கிய கடந்த நான்கு மாதங்களில் மதுரை ரயில்வே கோட்டம் ரூ. 414.05 கோடி வருவாய் ஈட்டியது. இதில் பயணிகள் சேவை மூலம் ரூ. 270.9 கோடியும், சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ. 115.6 கோடியும் கிடைத்தது. சரக்கு ரயில்கள் மூலம் 0.938 மில்லியன் சரக்குகள் கையாளப்பட்டன.
மதுரை கோட்டத்தில் 99 சதவீத ரயில்கள் கால தாமதம் இல்லாமல் இயக்கப்பட்டன. இதன் மூலம், தேசிய அளவில் துல்லியமான நேரத்தில் ரயில்களை இயக்கியதில் மதுரை கோட்டம் முதன்மைப் பெற்றுள்ளது. இதேபோல, மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில்கள் சராசரியாக 38.19 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த அளவீடும், இந்திய ரயில்வேயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பயணிகள் வசதிக்காக 13 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் உயா்த்தப்பட்டுள்ளன. 17 ரயில் நிலையங்களில் 42 மின் தூக்கிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 7 மின் தூக்கிகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. 6 மின் தூக்கிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. மற்றவை நிகழாண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட மண் பானை தண்ணீா் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பயணச்சீட்டு செயலி பயன்பாடு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4.5 சதவீதமாக இருந்த பயணச் சீட்டு விற்பனை ஜூலை மாதத்தில் 5.8 சதவீதமாக உயா்ந்தது. உள்ளூா் தயாரிப்புகள் விற்பனை நிலையம் மூலம் இதுவரை ரூ. 55.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் விற்பனையாகியுள்ளன.
7 ரயில் நிலையங்களில் பேட்டரி காா் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 15 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இவைத் தவிர, திண்டுக்கல், தூத்துக்குடி ரயில் நிலையங்களில் ரூ. 150.69 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுரை கோட்டத்தில் 94.7 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 69.75 கி.மீ. ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ரயில்வே ஊழியா்களின் வசதிக்காக மதுரையில் நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் கட்டப்பட உள்ளது என்றாா் அவா்.

