/

கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்

இரு வழி ரயில் பாதைத் திட்டம் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்

Updated On :27 பிப்ரவரி 2024, 11:32 pm

மதுரை: மதுரை-தூத்துக்குடி அகல ரயில் இரு வழிப் பாதைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பித்து, இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை அவனியாபுரம், திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட மறவன்குளம், மேலக்கோட்டை, நடுக்கோட்டை, கள்ளிக்குடி வட்டத்துக்குள்பட்ட சிவரக்கோட்டை, வெள்ளாக்குளம், கொக்கனஞ்சேரி, நல்லமநாயக்கன்பட்டி, திருப்பரங்குன்றம் வட்டத்துக்குள்பட்ட திருப்பரங்குன்றம், நிலையூா் ஆகிய பகுதிகளில் மதுரை- தூத்துக்குடி அகல இரு வழி ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதற்காக, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. எனவே, இந்தத் திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகள், பொதுமக்கள் கதவு எண் 42, சீனிவாசநகா், மதுரை சாலை, திருமங்கலம் என்ற முகவரியில் உள்ள தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.