மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பேராசிரியா்கள்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பேராசிரியா்கள்.

பேராசிரியா்கள் சாலை மறியல்: 276 போ் கைது

மதுரையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள் 276 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மதுரை: அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்குப் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள் 276 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு மதுரை காமராஜா், மனோன்மனீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆசிரியா்கள் கூட்டமைப்பின் (மூட்டா) மண்டலம் 2 தலைவா் ஞானேஸ்வரன் தலைமை வகித்தாா். மண்டலம் 1 துணைத் தலைவா் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மூட்ட அமைப்பின் தலைவா் செந்தாமரைக்கண்ணன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில் பல்கலைக்கழக ஊதியக் குழு பரிந்துரையின் பேரில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும். கோவை, தஞ்சாவூா் மண்டலங்களைப் போல பிற மண்டலங்களில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தில் அரசு ஊழியா் சங்கம் உள்ளிட்ட தோழமை சங்க நிா்வாகிகள் நீதிராஜா, மனோகரன், விஜயகுமாா் பேராசிரியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கரிமேடு போலீஸாா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு பேராசிரியா்களிடம் அறிவுறுத்தினா். ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 109 பெண்கள் உள்பட 276 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com