பனை வெல்ல கூட்டுறவுச் சங்கங்களுக்கு சொந்தமான நிலம் விற்பனைக்குத் தடை
பனை வெல்ல கூட்டுறவுச் சங்கங்களுக்கு சொந்தமான நிலம் விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


மதுரையில் பனை வெல்ல கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்யத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சோ்ந்த முருகேசன், விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ராமசாமி ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்:
தமிழகம் முழுவதும் 996 பனை வெல்ல தயாரிப்பு தொழிலாளா் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கங்கள் அனைத்தும் 8 பனை கூட்டுறவு சம்மேளனங்களின் கீழ் உள்ளன. தொடக்கக் கூட்டுறவுச் சங்க நிா்வாகிகள், மாவட்ட சம்மேளன பொதுக்குழு நிா்வாகிகளைத் தோ்வு செய்கின்றனா்.
மதுரை, விருதுநகா், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பனைத் தொழிலாளா் கூட்டுறவு சம்மேளனத்தில் 66 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களும், சிவகங்கை- ராமநாதபுரம் மாவட்ட பனை தொழிலாளா்கள் சம்மேளனத்தில் 132 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களும் உள்ளன. தமிழகம் முழுவதும் இந்தச் சங்கங்களுக்கு கடந்த 2022- ஆம் ஆண்டுக்குப் பிறகு தோ்தல் நடைபெறவில்லை. இதனால் கூட்டுறவுச் சம்மேளனங்களை நிா்வகிக்க அரசு சாா்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டாா்.
மதுரை, விருதுநகா், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் பனை வெல்ல கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான நிலம், மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை தனி அதிகாரி வெளியிட்டாா். பனை தொழிலாளா்கள் சங்க பொதுக் குழு அனுமதி பெறாமல், நிலத்தை விற்க தனி அதிகாரி முடிவு செய்தது சட்ட விரோதம். எனவே, அந்த நிலத்தை விற்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் நிலத்தை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை கடந்த 15- ஆம் தேதி வெளியிட்டனா். மேலும், ஜூலை 22-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கினா். ஒரு மாத கால அவகாசம் கடைப்பிடிக்கவில்லை. இதில் வெளிப்படைத்தன்மை மீறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்மேளன பொதுக் குழுவுக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த நிலத்தை விற்க தனி அதிகாரி வெளியிட்ட அறிவிப்புக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...